Latestமலேசியா

மோசமான மனநலப் பாதிப்புக்கு ஆளாகும் அதிக அபாயத்தில் 55,000-க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் – பொதுச் சேவைத்துறை அதிர்ச்சி தகவல்

கோலாலம்பூர், செப்-21-அரசு ஊழியர்களில் 55,169 பேர் மனநலப் பிரச்சினைகள், தற்கொலை எண்ணங்கள் உள்ளிட்ட அதிக ஆபத்தான மனநிலையில் இருக்கின்றனர். அரசு ஊழியர்களுக்கான உளவியல் ஆரோக்கிய டிஜிட்டல் சுயவிவர அமைப்பான MyPsyD மேற்கொண்ட பரிசோதனையில் அது தெரிய வந்திருக்கிறது.

அரசுப் பணியாளர்களின் உளவியல் நலனை வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தை அவ்வெண்ணிக்கை காட்டுவதாக பொதுச் சேவைத்துறையின் மேம்பாட்டுப் பிரிவு துணைத் தலைமை இயக்குநர் Datuk Dr Mohd Bakhari Ismail தெரிவித்தார். எனவே ஆபத்தில் உள்ளவர்களுக்கு ஆரம்பக்கட்ட உதவிகளை வழங்கும் நடவடிக்கைகளை அரசாங்கம் தீவிரப்படுத்தி வருவதுடன், துறைத் தலைவர்கள் உளவியல் அதிகாரிகளுடன் இணைந்து செயல்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

புக்கிட் கியாராவில் உள்ள தேசிய பொது நிர்வாகக் கழகத்தில் நடைபெற்ற PSYCON 2026 மாநாட்டில் Bakhari Ismail அதனைத் தெரிவித்தார். பணி தொடர்பான மன அழுத்தத்தை நிர்வகிக்கும் திறன் உள்ளிட்ட உளவியல் நலனைப் பாதுகாப்பதற்கான ஆதரவு அமைப்புகளை உருவாக்குவதில் துறைத் தலைவர்களுக்கு முக்கியப் பொறுப்பு உள்ளது என்றாரவர்.

அரசு ஊழியர்களின் மன உறுதி மற்றும் நல்வாழ்வை வலுப்படுத்த, அரசு பல்வேறு வகையான உள-சமூக ஆதரவு, நிதி உதவி மற்றும் பயிற்சிகளை வழங்கி வருகிறது. சேவைத் திட்டங்கள், ஊதியங்கள், படிகள் மற்றும் சலுகைகளை மேம்படுத்துவதும் அம்முயற்சிகளில் அடங்கும். ஆரோக்கியமான பணி-வாழ்க்கை சமநிலையை உறுதி செய்ய, ஆகஸ்ட் 1 முதல் ‘கலப்பு பணி நாள்’ (HBH) கொள்கையின் மூலம் நெகிழ்வுத்தன்மை கொண்ட பணி ஏற்பாடுகளையும் அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.

இவ்வேளையில், அரசு ஊழியர்களின் உளவியல் நல்வாழ்வை மதிப்பிடுவதற்காக ‘அரசு ஊழியர் மகிழ்ச்சிக் குறியீடு’ அறிமுகப்படுத்தப்படவுள்ளதாகவும், விரிவான மனநல வழிகாட்டுதல்களை JPA உருவாக்கி வருவதாகவும் Bakhari Ismail தெரிவித்தார். உளவியல் அதிகாரிகளின் திறனை மேம்படுத்த தொழில்முறைப் பயிற்சிகள் மற்றும் உயர்கல்வி வாய்ப்புகளும் தொடர்ந்து வழங்கப்படும்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!