Latestமலேசியா

ஜோகூர் மஇகா இளைஞர்களுக்குத் தொழில், AI, ஊடகப் பயிற்சிகள்; ருகேந்திரன் புதிய முயற்சி

ஜோகூர் மாநில மஇகா இளைஞர்களைத் தொழில், பொருளாதாரம் மற்றும் டிஜிட்டல் துறைகளில் வலுப்படுத்துவதற்கான பல்வேறு திட்டங்களைக் கஹாங் சட்டமன்ற உறுப்பினரும், கல்வி மற்றும் தகவல் பிரிவின் துணை ஆட்சிக் குழு உறுப்பினருமான உறுப்பினருமான ருகேந்திரன் வெள்ளையன் முன்வைத்துள்ளார்.

ஜோகூர் மாநில மஇகா இளைஞர் மாநாட்டில் உரையாற்றிய அவர், இளைஞர்களுக்கு வணிகப் பயிற்சி, நிதி நிர்வாக ஆலோசனை, பிராண்டிங் மற்றும் வர்த்தக முத்திரைப் பாதுகாப்பு தொடர்பான வழிகாட்டுதல்கள் வழங்கப்பட வேண்டும் என்றார்.

இளம் தொழில்முனைவோருக்கு நேரடி வணிக அனுபவம் கிடைக்கும் வகையில், எதிர்வரும் ஆண்டுகளில் தீபாவளி சந்தைகளில் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான வணிகத் தளங்களை ஒதுக்குவதற்கான வாய்ப்புகளை ஜோகூர் மஇகா ஆராய வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

ஆண்டுதோறும் ஜோகூரின் மூன்று முக்கிய மாவட்டங்களில் சமூக ஊடகப் பயிற்சிகளை நடத்துதல், செயற்கை நுண்ணறிவு தொடர்பான பட்டறைகளை ஏற்பாடு செய்தல், உள்ளடக்க உருவாக்கப் போட்டிகளை நடத்துதல் மற்றும் ஊடக நிறுவனங்களுக்குக் கல்விச் சுற்றுலாக்களை மேற்கொள்ளுதல் உள்ளிட்ட திட்டங்களையும் அவர் முன்வைத்தார்.

இதனிடையே, கட்சியின் தேசியத் தலைவர்களான தான்ஸ்ரீ விக்னேஸ்வரன் மற்றும் டத்தோ ஸ்ரீ சரவணன் ஆகியோருக்கு முழு ஆதரவு வழங்குவதுடன், கட்சியையும் அதன் தலைமையையும் தொடர்ந்து வலுப்படுத்தும் தீர்மானமும் கூட்டத்தில் முன்வைக்கப்பட்டதாக ருகேந்திரன் தெரிவித்தார்.

மேலும், கெமலா சட்டமன்ற உறுப்பினர் ரவின் ஜோகூர் ஆட்சிக்குழு உறுப்பினராக இருந்தபோது 18 ஆலயங்கள், இரண்டு பள்ளிகள் மற்றும் இறுதிச் சடங்குகளுக்கான ஓர் இடத்தை மாற்றியமைக்க மேற்கொண்ட முயற்சிகளை அவர் பாராட்டினார்.

இதற்கு ஆதரவளித்த ஜோகூர் இடைக்கால சுல்தான், மந்திரி பெசார் மற்றும் சுல்தானா ரோகாயா (Rogayah) அறவாரியத் தலைவர் டத்தோ சுகுமாரன் ஆகியோருக்கு நன்றி தெரிவித்த அவர், டத்தோ நிலா ராஜாவின் மக்கள் சேவையையும், தேசிய இளைஞர் தலைவர் அரவிந்த் கிருஷ்ணனின் வழிகாட்டுதல்களையும் நினைவுகூர்ந்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!