Latestமலேசியா

நஜீப்பின் மன்னிப்புக்கு வழிவகுத்ததாக அன்வார் மறுப்பு; ஷாங்காய் பயணத்திற்குப் பின் லோக்கைச் சந்திக்க முடிவு

ஷா ஆலாம், செப்டம்பர்-21,முன்னாள் பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜீப் ரசாக்கிற்கு நிபந்தனையுடனான பொது மன்னிப்பு வழங்கப்படுவதற்கு தாம் வழிவகுத்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளைப் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

சிலாங்கூர் ​ஷா ஆலாமில் நடைபெற்ற Perintis Reformis சந்திப்பில் பேசிய அன்வார், அரச மன்னிப்புக் கோருவது அரசியலமைப்பு ரீதியாக ஒவ்வொரு கைதிக்கும் உள்ள அடிப்படை உரிமை என சுட்டிக் காட்டினார்.

​மன்னிப்பு வாரியமானது, மத்திய அரசாங்கம் மற்றும் சட்டத்துறைத் தலைவரின் ஆலோசனைகளின் அடிப்படையில் கோரிக்கைகளை பரிசீலித்தாலும், இறுதி முடிவெடுக்கும் முழு அதிகாரம் மாமன்னருக்கே உள்ளது என அவர் தெளிவுப்படுத்தினார்.

எனவே, ​அரசியல் விமர்சகர்களின் குற்றச்சாட்டுகளை நிராகரித்த பிரதமர், இந்த நிபந்தனை மன்னிப்பு நஜீப் மீதான 1MDB தொடர்புடைய நிலுவையில் உள்ள பிற குற்றவியல் மற்றும் சிவில் வழக்குகளைப் பாதிக்காது என்றார்.

​50 மில்லியன் ரிங்கிட் அபராதத்தைச் செலுத்தும் பட்சத்தில், நஜீப் தனது எஞ்சிய சிறைத் தண்டனையை 2028 ஆகஸ்ட் வரை வீட்டுக் காவலில் கழிக்க நிபந்தனை மன்னிப்பு அனுமதிக்கிறது.

​இதனிடையே, இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து பதவி விலக முன்வந்துள்ள போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் குறித்து கருத்துரைத்த அன்வார், இருவரும் தங்களின் தனிப்பட்ட ஷங்ஹாய் பயணத்தை முடித்துத் திரும்பியதும் அவரை நேரில் சந்தித்துப் பேசவுள்ளதாகத் தெரிவித்தார்.

​ஊழலுக்கு எதிரான கொள்கையில் உறுதியாக நிற்கும் தலைவர் அந்தோணி லோக் எனப் பாராட்டிய பிரதமர், அவரது விளக்கத்தைக் கேட்டறிந்த பின்னரே இறுதி முடிவு எடுக்கப்படும் எனக் கூறினார்.

மன்னிப்பு வழங்கும் மாமன்னரின் அதிகாரத்தை மதிக்கும் அதே வேளை, நஜீப்புக்கு வீட்டுக் காவல் அனுமதி வழங்கப்பட்டுள்ள முடிவை ஏற்க முடியாத காரணத்தால், அமைச்சர் பதவியைத் துறப்பதாக அந்தோணி லோக் முன்னதாக அறிவித்தார்.

எனினும், DAP-யைச் சேர்ந்த மற்ற அமைச்சர்களும் துணை அமைச்சர்களும் பதவியில் தொடருவர் என்றார் அவர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!