
கோலாலம்பூர்- முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கின் RM50 மில்லியன் அபராதம் செலுத்தப்பட்டதைத் தொடர்ந்து, அவரை வீட்டுக் காவலில் வைக்க உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளதாக அவரது வழக்கறிஞர் ஃபர்ஹான் ஷாஃபி தெரிவித்திருக்கிறார்.
அம்னோ முன்னெடுத்த நன்கொடைத் திரட்டின் மூலம் போதிய நிதி கிடைத்ததால், அபராதம் செலுத்தப்பட்டதாக அக்கட்சி முன்னதாகக் கூறியிருந்தது.
அரசாணையின் அடிப்படையில் வீட்டுக் காவல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு தங்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும், அதை காஜாங் சிறைச்சாலையில் சமர்ப்பிக்கச் செல்வதாகவும் அவர் கூறினார். இதற்குப் பிறகும் சில நடைமுறைகள் உள்ளதால், தற்போது கேள்விகளுக்குப் பதிலளிக்க முடியாது என்றும் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
SRC International நிறுவனத்தின் RM42 மில்லியன் நிதி தொடர்பான அதிகார துஷ்பிரயோகம், நம்பிக்கை மோசடி, பணமோசடி குற்றங்களில் நஜிப் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டதை 2022ஆம் ஆண்டு கூட்டரசு நீதிமன்றம் உறுதிசெய்தது. அவருக்கு 12 ஆண்டு சிறைத்தண்டனையும் RM210 மில்லியன் அபராதமும் விதிக்கப்பட்டது. 2024ஆம் ஆண்டு அரச மன்னிப்பைத் தொடர்ந்து தண்டனையும் அபராதமும் குறைக்கப்பட்டன.
இந்த ஆண்டு செப்டம்பரில் வழங்கப்பட்ட கூடுதல் நிபந்தனை மன்னிப்பின்படி, RM50 மில்லியன் அபராதத்தைச் செலுத்தி, பிற நிபந்தனைகளையும் பின்பற்றினால், 2028 ஆகஸ்ட் 23ஆம் தேதி வரை வீட்டுக் காவலில் தண்டனையை அனுபவிக்க நஜிப்புக்கு அனுமதி வழங்கப்பட்டது.
இதற்கிடையில், அம்னோ அபராதத்தைச் செலுத்தியதைத் தாம் ஏற்கவில்லை என்று பிரதமர் அன்வார் இப்ராஹிம் கூறியுள்ளார். இதனால், பெரிய அளவிலான ஊழல் தண்டனையின்றித் தப்பிவிடலாம் என்ற எண்ணம் மக்களிடம் உருவாகக்கூடும் என்றும் அவர் தெரித்துள்ளார்.



