
கோலாலம்பூர், நவ-06-Bandar Tasik Selataனில் வணிகம் தொடர்பான கருத்து வேறுபாடு முற்றியதில், மொறுமொறுப்பான tofu விற்பனையாளர் ஒருவர் அறையப்பட்டு, கத்தியைக் காட்டி மிரட்டப்பட்டார். அச்சம்பவம் நேற்று பிற்பகலில் Jalan Tasik Selatan 21இல் உள்ள குடியிருப்பு வளாகமொன்றின் முன் நிகழ்ந்தது.
அதன் தொடர்பில் வாழைப்பழ பலகாரம் விற்கும் 38 வயதுடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக செராஸ் மாவட்டக் காவல் துறைத் தலைவர் உதவி ஆணையர் Mohd Rosdi Daud தெரிவித்தார். அவரிடமிருந்து சம்பவத்தில் பயன்படுத்தப்பட்டதாகக் கருதப்படும் கத்தி ஒன்றும் பறிமுதல் செய்யப்பட்டது.
அப்பகுதியில் மேற்கொள்ளப்படும் வணிக நடவடிக்கைகள் குறித்து ஏற்பட்ட கருத்து வேறுபாடே மோதலுக்குக் காரணமாக இருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. அச்சம்பவத்தில் பாதிப்புக்குள்ளானவர் மற்றும் சாட்சிகளிடம் இருந்து வாக்குமூலங்கள் பெறப்பட்டுள்ளன. அதோடு அருகிலுள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளும் சேகரிக்கப்பட்டு வருகின்றன. குற்றவியல் சட்டத்தின் 323 மற்றும் 506ஆவது பிரிவுகளின் கீழ் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக Mohd Rosdi கூறினார்.
மொறுமொறுப்பான tofu வணிகம் தொடர்பான தகராறில் கத்தியால் தாக்கப்படும் நிலைக்குத் தான் ஆளானதாக பயனர் ஒருவர் Threads சமூக ஊடகத்தில் பதிவிட்ட தகவல் முன்னதாக வைரலானது. வணிக இடம் தொடர்பான பிரச்சினை மற்றும் கோலாலம்பூர் மாநகர் மன்றம் (DBKL) வழங்கிய சம்மன் ஆகியவையே மோதலுக்குக் காரணம் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார். எனினும், அவர் கூறியுள்ள காரணம் குறித்து காவல்துறை இன்னும் எதனையும் உறுதிப்படுத்தவில்லை.



