
பினாங்கு, ஜனவரி 27 – தைப்பூசம் உலகெங்கும் வாழும் இந்துக்களால் முருகப் பெருமானுக்குக் கொண்டாட்டப்படும் விழாவாகும்.
அவ்வகையில், இவ்வருட தைப்பூசம் எதிர்வரும் பிப்ரவரி 11ஆம் திகதி அனுசரிக்கப்பட உள்ளது.
இதனை முன்னிட்டு, பினாங்கு இந்து அறக்கட்டளை வாரியம், பினாங்கு மாநில காவல் துறை தலைவர் டத்தோ ஹம்சா அஹ்மத் மற்றும் அதிகாரிகளுடன் மரியாதை நிமித்தம் சந்திப்பு ஒன்றை மேற்கொண்டது.
ஒரு மில்லியனுக்கும் அதிகமான பக்தர்களையும் சுற்றுலா பயணிகளையும் ஈர்க்கும் இந்த விழா, பினாங்கில் ஒரு முக்கிய ஆன்மிக நிகழ்வாக அமைந்துள்ளது.
இந்நிலையில், விழாவின் பல்வேறு ஏற்பாடுகள் குறித்து இந்த சந்திப்பில் விரிவாக விவாதிக்கப்பட்டது.
வாகன நெரிசலை கையாள வாகன இயக்கக் கட்டுப்பாடு மற்றும் போக்குவரத்து திட்டமிடல், திரளான கூட்டத்தில் பக்தர்களின் பாதுகாப்பு உறுதிசெய்யும் நடவடிக்கைகள், சடங்குகள் மற்றும் விழாக்களின் சரியான ஏற்பாடுகள் என பல முக்கிய அம்சங்கள் கலந்துரையாடப்பட்டன.
இரு தரப்பினரும் இந்த விழாவின் புனிதத்தையும் கலாச்சார முக்கியத்துவத்தையும் பேணிக்காக்கும் அவசியத்தை வலியுறுத்தினர்.
தைப்பூச திருவிழாவை அமைதியாகவும் மகிழ்ச்சியாகவும் கொண்டாட, சிறந்த முயற்சியுடன் இந்த ஒருங்கிணைந்த பணிகள் செய்யப்படவுள்ளன.
அவ்வகையில், பக்தர்களும் வழிமுறைகளைக் கடைபிடித்து, அதிகாரிகளுடன் ஒத்துழைத்து, பக்தி நெறியுடன் திருவிழாவில் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.