
கோலாலாம்பூர், பிப்ரவரி-3-ONSA என சுருக்கமாக அழைக்கப்படும் 2025 இணையப் பாதுகாப்புச் சட்டம் ஜனவரி 1 முதல் அமுலுக்கு வந்துள்ளது.
2024 டிசம்பரில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு, கடந்தாண்டு மே மாதத்தில் அரசாங்கப் பதிவேட்டில் இடம்பெற்ற இச்சட்டம், நாட்டின் டிஜிட்டல் தளங்களை கட்டுப்படுத்தும் புதியச் சட்டமாகும்.
சுருக்கமாகச் சொன்னால் ONSA, பயனர்கள் உருவாக்கும் உள்ளடக்கங்களைக் கொண்டு வரும் தளங்களுக்கு புதிய பொறுப்புகளை விதிக்கிறது.
குறிப்பாக குழந்தைகளின் பாதுகாப்புக்கு இது முக்கிய அரணாக விளங்கவிருக்கிறது.
2025 ஜனவரி முதல் நவம்பர் வரை, நாட்டில் RM2.7 பில்லியன் மதிப்பிலான இணைய மோசடிகள் பதிவாகியுள்ளன.
அதே காலக்கட்டத்தில், குழந்தை பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பான கும்பல்களை முறியடித்து, போலீஸார் 31 பேரை கைதுச் செய்தனர்.
இந்நிலையில், மோசடி, அநாகரீக உள்ளடக்கம், தொல்லை, வன்முறை, பயங்கரவாதம், குழந்தைகளை சுயதீங்குக்கு ஊக்குவிக்கும் உள்ளடக்கம் போன்றவற்றை இச்சட்டம் கட்டுப்படுத்துகிறது.
ஆனால், தனிப்பட்ட செய்தி அனுப்பல் (private messaging), சட்டப்பூர்வமான பேச்சு அல்லது அரசியல் கருத்துக்களை ONSA கண்காணிக்காது.
அதே போல், டிஜிட்டல் கல்வியறிவு, பெற்றோரின் ஈடுபாடு மற்றும் இணைய நடத்தை விதிமுறைகள் போன்ற பிரச்னைகளும் ONSA சட்டத்தின் அதிகார வரம்பிற்கு வெளியே உள்ளன.
ஆக, இந்தச் சட்டத்தின் நடைமுறை பலன்கள், சமூகத் தளங்கள் எவ்வாறு தங்கள் அமைப்புகளை மாற்றுகின்றன மற்றும் ஒழுங்குமுறை கண்காணிப்பு எவ்வாறு செயல்படுகிறது என்பதை பொருத்தே அமையும்.



