2025 பினாங்கு ‘சீ’ விளையாட்டுப் போட்டியில் இடம்பெறும் கபடி

பினாங்கு – ஜூலை 29 – 2025 ஆம் ஆண்டு செப்டம்பர் 3 முதல் 6 ஆம் தேதி வரை மலேசிய அறிவியல் பல்கலைக்கழகத்தில் (USM) நடைபெறவுள்ள பினாங்கு ‘சீ’ விளையாட்டுப் போட்டியில், இந்தியர்களின் பாரம்பரிய விளையாட்டான கபடி போட்டியும் இடம்பெறவுள்ளதென்று மலேசிய கபடி சங்கம் (KAM) அறிவித்துள்ளது.
இந்த அனைத்துலக போட்டியில் மலேசியா, தாய்லாந்து, சிங்கப்பூர், இந்தோனேசியா மற்றும் திமோர் லெஸ்டே ஆகிய ஐந்து தென்கிழக்கு ஆசிய நாடுகள் பங்கேற்கவுள்ளன.
நிலையான கபடி பாணி, சூப்பர் 5 கபடி மற்றும் 3-ஸ்டார் கபடி என்று வகைப்படுத்தப்பட்ட இப்போட்டியில் மொத்தம் ஆறு தங்கப் பதக்கங்கள் வழங்கப்படும்.
தாய்லாந்தில் 2025 இல் நடைபெறவுள்ள ‘சீ’ விளையாட்டுப் போட்டிக்கு முன் அணிகள் தங்கள் தயாரிப்புகளை வலுப்படுத்தவும், ஒத்துழைப்பு மற்றும் போட்டி மனப்பான்மையை மேம்படுத்தவும் இப்போட்டி ஒரு முக்கிய தளமாக இருக்கும்.
இந்த போட்டி தென்கிழக்கு ஆசிய கபடி கூட்டமைப்பு (SEAKF), ஆசிய கபடி கூட்டமைப்பு (AKF) மற்றும் சர்வதேச கபடி கூட்டமைப்பு (IKF) ஆகியவற்றின் அதிகாரப்பூர்வ அங்கீகாரத்தை பெற்றுள்ளது.
இந்த நிகழ்வை சாத்தியமாக்கிய அனைத்து நாடுகள், அதிகாரிகள் மற்றும் ஆதரவாளர்களுக்கு தனது உளமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறார் மலேசிய கபடி சங்க தலைவர் பத்மநாதன் எங்கைத்தரராமன்.