
கோலாலம்பூர், ஆகஸ்ட்-23- 2025/2026-ஆம் கல்வி தவணைக்கான மெட்ரிகுலேஷன் படிப்புக்கு, 1,537 இந்திய மாணவர்களுக்கு இடம் வழங்கப்பட்டுள்ளது.
அரசாங்கம் ஒதுக்கியிருந்த 1,116 இடங்களை விட இது அதிகமென, கல்வி அமைச்சர் ஃபாட்லீனா சிடேக் தெரிவித்தார்.
அவர்களில் 341 மாணவர்கள் SPM தேர்வில் 10A அல்லது அதற்கும் மேற்பட்ட மிகச் சிறந்த தேர்ச்சியுடன் நேரடி வாய்ப்பைப் பெற்றவர்கள்.
எஞ்சியவர்கள் merit எனப்படும் தகுதி அடிப்படையில் தேர்வாகியவர்கள். கல்வி மற்றும் புறப்பாட நடவடிக்கைகளின் தேர்ச்சி, குடும்ப வருமானம் போன்றவை அதற்கு அளவுகோல்களாகப் பயன்படுத்தப்பட்டன.
கல்வித் தேர்ச்சிக்கு 90 விழுக்காடும் புறப்பாட நடவடிக்கைகளுக்கு 10 விழுக்காடும் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.
அந்த 90 விழுக்காடு என்பது வெறும் A-களை வைத்து மட்டுமே முடிவுச் செய்யப்படுவதில்லை; மாறாக மாணவர்கள் தேர்ந்தெடுக்கும் துறைகளுக்கு ஏற்ப முதன்மை 4 பாடங்களின் தேர்ச்சியையும் கருத்தில் கொள்கிறது.
அதே சமயம், குடும்ப வருமானம் என வரும் போது 60 விழுக்காட்டு இடங்கள் B40 குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கும், எஞ்சிய 40 விழுக்காடு M40, T20 குடும்பங்களிலிருந்து வரும் மாணவர்களுக்கும் ஒதுக்கப்படுகின்றன.
மொத்தம் 30,000 இடங்கள் மெட்ரிகுலேஷன் படிப்புக்கு உள்ள நிலையில் அதில் 90 விழுக்காடு பூமிபுத்ராக்களுக்கும் 10 விழுக்காடு பூமிபுத்ரா அல்லாதவர்களுக்கும் ஒதுக்கப்படுகின்றன.
மக்களவையில் பத்து நாடாளுமன்ற உறுப்பினர் பி.பிரபாகரன் கேட்ட கேள்விக்கு, எழுத்துப்பூர்வமாக வழங்கிய பதிலில் ஃபாட்லீனா அவ்வாறு கூறினார்.
மெட்ரிகுலேஷன் படிப்புக்கான SPM A தேர்ச்சி குறித்து முன்னதாக சர்ச்சை எழுந்த போது, இந்திய மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்கள் குறித்த புள்ளிவிவரங்களை வெளியிடுமாறு, ம.இ.கா தேசியத் துணைத் தலைவர் டத்தோ ஸ்ரீ எம். சரவணன் குரல் எழுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.