
கோலாலம்பூர், ஜூலை-13- ‘பழங்களின் அரசன்’ என்ற பட்டப் பெயருக்குச் சொந்தமானவை டுரியான் பழங்கள்.இதில் யாருக்கும் குறிப்பாக மலேசியர்களுக்கு மாற்றுக் கருத்தே கிடையாது.
இந்நிலையில் அந்த ‘அரசன்களுக்கு எல்லாம் அரசன்’ என்ற பட்டத்தை மீண்டுமொரு முறை உறுதிச் செய்துள்ளது மலேசியாவின் மூசாங் கிங் டுரியான் பழங்கள்.
சிலாங்கூர், பாங்கி கோல்ஃப் ரிசோர்ட்டில் நடைபெற்ற 2025 உலக டுரியான் போட்டியில் தான் மூசாங் கிங் அம்மகுடத்தைச் சூடியது.
பினாங்கு முதல் ஜோகூர் வரை, பஹாங் முதல் கெடா வரை மலேசியாவின் 96 மிகச் சிறந்த டுரியான் பழ வகைகள் போட்டியில் பங்கேற்றன.
உணவு நிபுணர்கள், சமையல்காரர்கள் மற்றும் டுரியான் பிரியர்களை உள்ளடக்கிய நடுவர்கள், இனிப்பு, கசப்பு, நறுமணம் மற்றும் தனித்துவமான கிரீம் தன்மை ஆகியவற்றை ஒருங்கே கொண்ட டுரியான் பழங்களைத் தேடினர்.
Tupai King, Tekka, Kim Hong, D13 போன்ற முன்னணி டுரியான் வகைகள் கடும் போட்டியைக் கொடுத்த போதும், தனித்துவமிக்க மூசாங் கிங்கின் அருகில் கூட அவற்றால் வர முடியவில்லை.
கடைசியில் We Go Farm தோட்டத்தில் விளைந்த இனிப்பான கிரீம் போன்ற அலாதி சுவையுடன் கூடிய தங்க நிற மூசாங் கிங் டுரியான் பழங்கள், மிகக் சிறந்த டுரியான்களாக வாகை சூடின.
விவசாயம் மற்றும் உணவு உத்தரவாத அமைச்சர் டத்தோ ஸ்ரீ மொஹமட் சாபு அந்நிகழ்வில் சிறப்பு வருகையாளராக கலந்துகொண்டு, ‘அரசன்களுக்கெல்லாம் அரசன்’ பட்டத்தை மூசாங் கிங்கிற்கு வழங்கினார்.
மூசாங் கிங் தவிர்த்து, Black Thorn, D24 உள்ளிட்ட மலேசிய டுரியான்களும் உலகளவில் புகழ்பெற்றவையாகும்.