2026 தைப்பூசம்: புதுப்பொலிவுக்குத் தயாராகும் பத்து மலை ஆற்றங்கரை; நடராஜா தகவல்

பத்து மலை, ஜனவரி-10,
2026 தைப்பூசத்தை முன்னிட்டு பத்து மலை ஆற்றங்கரை, பக்தர்களின் வசதிக்காக புதுப்பொலிவுடன் தயாராகி வருகிறது.
தைப்பூசம் பிப்ரவரி 1-ஆம் தேதியே கொண்டாடப்படுகிறது என்றாலும், தை மாதம் பிறந்த கையோடு பக்தர்கள் விரதமிருந்து தங்களின் நேர்த்திக் கடனை பூர்த்திச் செய்ய தொடங்கி விடுவர்.
எனவே, ஆற்றங்கரையை சுத்தம் செய்யும் பணிகள் தற்போது முழு வீச்சில் நடைபெற்று வருவதாக, கோலாலம்பூர் ஸ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தானத்தின் தலைவர் தான் ஸ்ரீ ஆர். நடராஜா கூறினார்.
இந்தப் பணிகள், வழக்கம் போல பிரபல குத்தகையாளர் விவேக் மற்றும் பாலா தலைமையில் மேற்கொள்ளப்படுகிறது.
அண்மையில் மேம்பாலம் கீழ் தீ விபத்தில் சேதமடைந்த பகுதி சுத்தம் செய்யப்பட்டு, அங்கும் பால்குடம் ஏந்துவோருக்கு வசதி செய்யப்பட்டுள்ளது.
கடந்தாண்டை போல இம்முறையும் நீளமான வேல் ஆற்றங்கரையில் நிறுவப்பட்டு, ஒரு வாரம் பக்தர்களுக்காக இருக்கும் என்றார் அவர்.
இந்நிலையில் பத்து மலைக்கு வரும் பக்தர்கள் நேர்த்திக் கடனை பூர்த்திச் செய்யும் போது ஆற்றங்கரையை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் எனவும் நடராஜா கேட்டுக் கொண்டார்.



