
சிலாங்கூர், டிசம்பர் 13 – சிலாங்கூர் மாநிலத்தை சுத்தமாக வைத்திருக்கும் நோக்கில், 2026 முதல் பொது இடங்களில் குப்பை வீசுபவர்கள் மற்றும் சட்டவிரோதமாக கழிவுகளை கொட்டுபவர்கள் மீது சிலாங்கூர் அரசு கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்க உள்ளது.
மாநில உள்ளாட்சித் துறை மற்றும் சுற்றுலா குழுத் தலைவர் டத்துக் எங் சூ லிம் கூறுகையில், 2007 ஆம் ஆண்டின் திடக் கழிவு மற்றும் பொது சுத்தம் மேலாண்மைச் சட்டம் சிலாங்கூரில் தற்போது அமல்படுத்தப்பட உள்ளது.
அச்சட்டத்தின்படி 100,000 ரிங்கிட் வரை அபராதமும், 5 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் விதிக்க இயலும். இது தற்போது உள்ள 1,000 ரிங்கிட் அபராத வரம்பை விட பல மடங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், அடுத்தாண்டு ஜனவரி 1 முதல், குப்பையை பொறுப்பில்லாமல் வீசுபவர்கள் அடுத்த 12 மணி நேரம் வரை சமூக சேவை செய்ய வேண்டியிருக்கும் எனவும் அவர்கள் பொது இடங்களில் குப்பை எடுக்கும் பணியில் ஈடுபடுத்தப்படுவர் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், மாநில அரசு SELKitar மறுசுழற்சி திட்டத்தை விரிவுபடுத்தி வருகிறது. இந்த ஆண்டு அக்டோபர் வரை 77 டன் மறுசுழற்சி பொருட்கள் சேகரிக்கப்பட்டுள்ளன.
குப்பையை குறைத்தாலே செலவும் குறையும், சுற்றுச்சூழலும் பாதுகாக்கப்படும் என எங் சூ லிம் மேலும் கூறினார்.



