
கோலாலம்பூர், பிப்ரவரி-5-2027 கல்வியாண்டில், முதல் வகுப்பில் சேர பதிந்துகொள்ளும் 6 வயது குழந்தைகள் அனைவரும் ஏற்றுக் கொள்ளப்படுவார்கள்.
எந்த காரணத்திற்காகவும் கல்வி அமைச்சு ஒருவரையும் நிராகரிக்காது என, அமைச்சர் ஃபாட்லீனா சிடேக் உறுதியளித்துள்ளார்.
அதிகமான மாணவர் சேர்க்கையைச் சமாளிக்க, அமைச்சு முழு தயார் நிலையில் உள்ளது.
கூடுதல் வகுப்புகளைத் திறப்பது, புதிய கட்டடங்களை IBS அதாவது தொழில்துறை கட்டுமான முறையில் அமைப்பது… தேவைப்பட்டால் அருகிலுள்ள பள்ளிகளுக்கு மாணவர்களை மாற்றுவது ஆகியவை அவற்றிலடங்கும் என்றார் அவர்.
தவிர, 20,000 புதிய ஆசிரியர்கள் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்படவுள்ளனர்.
எனவே, 6 வயதுப் பிள்ளைகளை முதலாமாண்டில் சேர்க்கும் விண்ணப்பம் ஒருவேளை நிராகரிக்கப்பட்டு விட்டால் என்ன செய்வது என்ற பயத்தில், ஒரு தற்காப்புக்காக பாலர் பள்ளியிலும் அவர்களைப் பதிய வேண்டிய அவசியமும் பெற்றோர்களுக்கு இல்லை என ஃபாட்லீனா கூறினார்.
அடுத்தாண்டு முதலாமாண்டில் நுழைய, 2021-ஆம் ஆண்டு ஜனவரி 2 முதல் டிசம்பர் 31 வரை பிறந்தவர்களும், வரும் பிப்ரவரி 15 முதல் மார்ச் 31 வரை பதிவுச் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மற்றொரு நிலவரத்தில், தனியார் பாலர் பள்ளிகள் விரும்பினால் குழந்தைகளை 3 வயதிலிருந்தே சேர்க்கலாம் எனவும் அமைச்சு அறிவித்துள்ளது.
தற்போது 4 வயதிலேயே பிள்ளைகளைத் தனியார் பாலர் வகுப்புகளில் சேர்க்க முடிவதை அவர் சுட்டிக் காட்டினார்.



