
ஜோர்ஜ் டவுன் , நவ 5 – கூலிம், சுங்கை கரங்கான் ( Sungai Karangan ) முதியோர் இல்லத்தில் பராமரிக்கப்பட்ட 21 ஆதரவற்றவர்கள், பினாங்கு பிறை தாமான் இந்திரவாசேவிலுள்ள (Taman Inderawasih) மலேசிய தமிழர் குரல் அமைப்பின் தலைமைத்துவ அலுலகத்தில் விட்டுச் சென்றவரை மலேசிய தமிழர் குரல் அமைப்பின் தலைவர் டேவிட் மார்ஷல் கடுமையாக சாடினார்.
இன்று நண்பகல் 12 மணியளவில் தங்களது தலைமையத்தில் கெடா பி.கே.ஆர் கட்சியைச் சேர்ந்த ஜெயா பிரேம் என்பவர் அந்த ஆதரவற்றவர்களை அழைத்து வந்து விட்டுச் சென்றதோடு அவர்களது அடையாளக் கார்டு மற்றும் இதர ஆவணங்களையும் கொண்டுச் சென்றுள்ளார். இது குறித்து டேவிட் மார்ஷல் பிறை போலீஸ் நிலையத்தில் புகார் செய்துள்ளார்.
இதனிடையே பாதிக்கப்பட்ட ஆதரவற்றவர்களுக்கு சமூக நலத்துறையில் அடைக்கலம் பெற்றுத்தருவதற்காக தீவிர முயற்சியை மேற்கொண்டு வருவதாகவும் டேவிட் மார்ஷல் தெரிவித்தார். தற்போது இந்த ஆதரவற்றவர்களில் பலருக்கு மருத்துவ வசதி மற்றும் அவர்களுக்கு உணவுகள் வழங்குவதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. இன்று இரவுக்குள் அவர்களை சமூக நலத்துறையில் தங்க வைப்பதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருவதாக அவர் கூறினார்.