
கிள்ளான், அக்டோபர்-27, சிலாங்கூர் மாநில அரசின் தீபாவளி திறந்த இல்ல பொது உபசரிப்பு கிள்ளான் லிட்டில் இந்தியாவின் செட்டி திடலில் இனிதே நடைபெற்றது.
சனிக்கிழமை மாலை 6 மணி தொடக்கம் இரவு 11 மணி வரை நடைபெற்ற அந்நிகழ்வுக்கு மாநில மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி தலைமைத் தாங்கினார்.
மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் பி.பாப்பா ராயுடு, ஒற்றுமை அமைச்சின் துணையமைச்சர் சரஸ்வதி கந்தசாமி, கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் வீ.கணபதிராவ் உள்ளிட்ட பிரமுகர்களும் அதில் பங்கேற்று சிறப்பித்தனர்.
ஆடல் பாடல் நிகழ்ச்சிகளோடு, 12 வயதுக்கு கீழ்பட்ட சிறார்களுக்கு டத்தோ ஸ்ரீ அமிருடின் தீபாவளி அன்பளிப்புப் பணத்தையும் எடுத்து வழங்கினார்.
நிகழ்ச்சியின் சிறப்பம்சமாக தமிழ்ப்பள்ளிகளுக்கும், சிலாங்கூரில் உள்ள இந்து ஆலயங்களுக்கும், சீக்கியக் கோவில்களுக்கும் நிதியுதவிகள் வழங்கப்பட்டன.
சிலாங்கூரில் வசதி குறைந்த B40 குடும்பங்களைச் சேர்ந்த அரசாங்க மற்றும் தனியார் உயர் கல்விக் கூட மாணவர்கள், சிறு தொழில் செய்பவர்கள் உள்ளிட்டோருக்கும் நிதியுதவிகள் வழங்கப்பட்டன.
கிள்ளான் சுற்று வட்டார மக்கள் திரண்டு வந்து, இந்த தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பில் பங்கேற்றனர்.