பாசீர் பூத்தே, டிச 13 – பாசீர் பூத்தே, ஜாலான் ஜெராம் பாசுவில் இன்று விடியற்காலை 5.30 மணியளவில் போலீசார் மேற்கொண்ட ஒரு நடவடிக்கையில் இதற்கு முன் 24 குற்றச்செயல் பின்னணியைக் கொண்ட ஆடவன் ஒருவன் சுட்டுக்கொல்லப்பட்டதாக கிளந்தான் போலீஸ் தலைவர் டத்தோ முகமட் யூசோப் மாமாட் ( Yusoff Mamat ) தெரிவித்தார். கார் இழுத்துச் செல்லும் வேலை செய்துவந்த அந்த 31 வயது நபர் 17 குற்றப் பதிவுகள் மற்றும் ஏழு போதைப்பொருள் தொடர்பான வழக்குகளுடன் சம்பந்தப்பட்டவ அந்த ஆடவன் போலீசாரால் தேடப்பட்டு வந்தவன் ஆவான் . அந்த நபர் ஓட்டிச் சென்ற வாகனத்தை போலீசார் பின் தொடர்ந்து சென்றபோது ஜாலான் ஜெராம் பெசுவில் தனது வாகனத்தை நிறுத்திவிட்டு கீழே இறங்கிய அந்த நபர் போலீஸ்காரர்களை நோக்கி துப்பாக்கியால் சுடத் தொடங்கினான்.
இதனை தொடர்ந்து தங்களை தற்காத்துக் கொள்வதற்காக போலீசார் திரும்ப சுட்டதால் சம்பவம் நிகழ்ந்த இடத்திலேயே அந்த ஆடவன் கொல்லப்பட்டான். அந்த ஆடவன் ஓட்டிச் சென்ற காரில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் ஒரு துப்பாக்கி, போலித் துப்பாக்கி, இரண்டு பாராங் கத்திகள் மற்றும் சிறைக்கு கடத்திச் செல்வதற்கு திட்டமிடப்பட்டிருந்ததாக நம்பப்படும் புகையிலை பொட்டலமும் பறிமுதல் செய்யப்பட்டதாக முகமட் யூசோப் தெரிவித்தார்.