
ஈப்போ, ஜனவரி 20 – ஈப்போவில் அதிகமான இந்திய மாணவர்கள் பயின்று வரும் சுங்கை பாரி ஆண்கள் இடைநிலைப்பள்ளியில் பொங்கல் விழா கடந்த ஜனவரி 18ஆம் திகதி இனிதே கொண்டாடப்பட்டது.
ஒவ்வொரு வருடமும் கொண்டாடப்படும் இவ்விழாவில், இவ்வருடம் 120-க்கும் மேற்பட்ட மாணவர்களும் பெற்றோர்களும் உற்சாகமாகக் கலந்து சிறப்பித்தனர்.
பள்ளியின் இணைப்பாடத் துணைத்தலைமையாசியர் பேபி ராணி முத்துசாமி (Baby Ranee Muthusamy) தலைமையில் நடைபெற்ற விழாவில், பொங்கல் வைத்தல், உறியடித்தல், கரும்பு சாப்பிடுதல், தோரணம் பின்னுதல், பொங்கல் ஈ-அட்டை வடிவமைப்பு என 5 போட்டிகள் நடத்தப்பட்டன.
இவ்விழாவிற்கு சிறப்பு விருந்தினர்களாக பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் டத்தோ ஸ்ரீ AKS சக்திவேல், நேசக்கரங்கள் பேராக் மாநிலச் சங்கத்தின் ஆலோசகர் திரு ஜெயசிலன், மற்றும் பள்ளியின் அனைத்து இந்திய ஆசிரியர்களும் பங்கேற்றனர்.
இதனிடையே, பள்ளியிலுள்ள 90 சதவிகிதம் இந்திய மாணவர்களைக் கருத்தில் கொண்டு, பொங்கல் தினத்தையொட்டி கடந்த ஜனவரி 14 அன்று பள்ளி விடுமுறை அறிவிக்கப்பட்டதாக பள்ளியின் நெறிவுரைஞர் யோகேஸ்வரன் முனியாண்டி தெரிவித்தார்.