
கோலாலாம்பூர், நவம்பர் , 17 -நாட்டில் 26 நெடுஞ்சாலைகள் தற்போது SPT எனும் திறந்த டோல் கட்டண முறையை நடைமுறைப்படுத்தியுள்ளன.
இப்புதிய முறையின் கீழ், வாகனமோட்டிகள் டோல் கட்டணத்தை டெபிட்/கிரெடிட் அட்டைகள், Touch ‘n Go, SmartTAG அல்லது RFID மூலம் செலுத்த வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
இது நெடுஞ்சாலைகளில் நெரிசலைக் குறைத்து, பயணத்தை எளிதாக்கும் நோக்கத்துடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக, பொதுப் பணித் துறை துணையமைச்சர் டத்தோ ஸ்ரீ அஹ்மாட் மஸ்லான் கூறினார்.
இவ்வேளையில், இந்த SPT முறையை மூடப்பட்ட டோல் சாவடி நெடுஞ்சாலைகளுக்கும் விரிவுபடுத்த PLUS நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக அஹ்மாட் மஸ்லான் கூறினார்.
JustGo செயலியுடன் இணைக்கப்பட்ட ANPR எனப்படும் தானியங்கி எண் பட்டை அங்கீகார தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, டோல் கட்டணங்களை தொடர்பில்லாமல் தானியங்கி மற்றும் டிஜிட்டல் முறையிலும் செலுத்தவும் PLUS பரிந்துரைத்துள்ளது.
எது எப்படி இருப்பினும், டோல் கட்டண வசூல் முறையை நவீனப்படுத்தி, பயணிகளுக்கு அதிக வசதி வழங்குவதே அரசாங்கத்தின் நோக்கம் என்றார் அவர்.



