
பஞ்சாப், செப்டம்பர்-27,
இந்தியாவின் ‘இரும்பு மனிதர்’ என்றழைக்கப்படும் பிரபல தற்காப்புக் கலை வீரர் விஸ்பி கராடி (Vispy Kharadi), மீண்டும் உலகை வியக்க வைத்துள்ளார்.
அண்மையில் பஞ்சாப் மாநிலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அவர் 261 கிலோ கிராம் அல்லது 575.4 பவுண்ட் எடையிலான ஹெர்குலீஸ் தூண்களை (Hercules Pillars) 67 வினாடிகளுக்குத் தாங்கிப் பிடித்து, கின்னஸ் உலக சாதனை படைத்தார்.
இது, அந்தப் பிரிவில் ஆண் போட்டியாளர்கள் அதிகபட்சமாக எடை தாங்கிய உலகச் சாதனை என தற்போது கின்னஸ் புத்தகத்தில் அதிகாரப்பூர்வமாக பதிவுச் செய்யப்பட்டுள்ளது.
261 கிலோ என்பது ஒரு துருவக் கரடியின் பாதி எடைக்குச் சமமாகும்.
இது, கராடியின் 17-ஆவது கின்னஸ் சாதனையுமாகும்; இதனை இந்திய ஆயுதப்படைகளுக்கு அர்ப்பணிப்பதாக அவர் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
கராடி முன்னதாக 2019-ல், இரும்பு கம்பிகளைக் கழுத்தால் வளைத்தும், 2022-ல் ஆணி படுக்கையில் படுத்தபடி 528 கிலோ காங்கிரீட் கல்லை உடைத்தும், 2025-ல் ஆயிரத்து 819 கிலோ எடையைத் தாங்கியும் பல கின்னஸ் சாதனைகளைப் படைத்துள்ளார்.
அவரின் அபார உடல் வலிமை மீண்டும் ஒருமுறை உலகளவில் பாராட்டை பெற்றுள்ளதாக இந்திய ஊடகங்களும் சமூக வலைத்தளங்களும் கொண்டாடுகின்றன.