
கோலாலம்பூர், ஏப்ரல்-14, Wawasan 2020 அல்லது 2020 தொலைநோக்கு டைம் கேப்சூலை 28 ஆண்டுகள் கழித்து தாமே திறந்துப் பார்ப்பேன் என்று நினைக்கவில்லை என, முன்னாள் பிரதமர் துன் Dr மகாதீர் மொஹமட் நெகிழ்ச்சித் தெரிவித்தார்.
நாட்டின் 4-ஆவது பிரதமராக இருந்த போது 1996-ஆம் ஆண்டு அக்டோபர் 1-ஆம் தேதி KL Tower எனப்படும் கோலாலம்பூர் கோபுரத்தில் அந்த கேப்சூலை மகாதீர் புதைத்து வைத்தார்.
2020-ஆம் ஆண்டில் இதனைத் திறக்கத் திட்டமிடப்பட்டிருந்தது; தாமதமானாலும் அதனைத் திறக்கும் வாய்ப்புக் கிட்டியது குறித்து, நேற்று காலை நடைபெற்ற சிறப்பு நிகழ்வுக்குப் பிறகு மகாதீர் மகிழ்ச்சித் தெரிவித்தார்.
அதுவும் நூறு வயதில் அதனைத் திறந்து வைக்க தாம் இன்னமும் உயிரோடு இருப்பதற்காக, கடவுளுக்கும் அவர் நன்றித் தெரிவித்தார்.
2020-ஆம் ஆண்டு மலேசியா வளர்ச்சியடைந்த நாடாக உருவாகியிருக்கும் என்ற மலேசியர்களின் நம்பிக்கையின் அடையாளமாக அந்த டைம் கேப்சூல் புதைக்கப்பட்டது.
அதில் அடையாள அட்டை, புகைப்படங்கள், கைப்பேசி, பத்திரிகை அறிக்கை, மகாதீர் கைப்பட எழுதிய கவிதை உள்ளிட்டப் பொருட்கள் அடையாளமாக வைக்கப்பட்டிருந்தன.
கேப்சூலைத் திறந்து அப்பொருட்களை வெளியில் எடுத்த போது அப்பெரும் தலைவர் நெகிழ்ந்துபோனார்.
டைம் கேப்சூல் என்பது வருங்கால சந்ததியினர் அறிந்துகொள்ளும் வகையில், தற்கால நிகழ்வுகளின் உண்மைத் தகவல்கள், வரலாற்றுக் குறிப்புகள், ஆவணங்கள் போன்றவற்றை பத்திரமாக புதைத்து வைக்கும் சிலிண்டர் வடிவிலான ஒரு பொருளாகும்.