
ஜோர்ஜ்டவுன், ஜூலை-27 – பினாங்கில் 2008-ஆம் ஆண்டு DAP ஆட்சிக்கு வந்ததிலிருந்து அம்மாநிலத்திலுள்ள 28 தமிழ்ப் பள்ளிகளும், அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் கண்டுள்ளன.
வீடமைப்புத் துறைக்கான மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் டத்தோ ஸ்ரீ சுந்தரராஜு சோமு அவ்வாறு பெருமிதம் தெரிவித்தார்.
பெரும்பாலான தமிழ்ப் பள்ளிகளில் அடிப்படை வசதிகளும் மிகவும் வலுவுடன் உள்ளன; தவிர, smart board போன்ற தொழில்நுட்ப வசதிகளும் ஏற்படுத்தித் தரப்பட்டுள்ளன.
இத்தகைய முன்னேற்றங்களால் கல்வியிலும் மற்ற மனித மூலதன துறைகளிலும் தமிழ்ப் பள்ளி மாணவர்கள் பல்வேறு வெற்றிகளைக் குவித்து வருகின்றனர்.
பினாங்கு மாநிலத்தில் உள்ள 28 தமிழ்ப் பள்ளிகள், பாலர்பள்ளிகள், பஞ்சாபி மற்றும் தெலுங்கு கல்வி மையங்களுக்கு மாதிரி காசோலை வழங்கும் விழாவில் கலந்துகொண்டு பேசிய போது சுந்தரராஜு அவ்வாறு சொன்னார்.
மாநில முதல்வர் Chow Kon Yeow அந்நிகழ்வுக்குத் தலைமைத் தாங்கி, மாதிரி காசோலைகளை எடுத்து வழங்கினார்.
மொத்தமாக 24 லட்சம் ரிங்கிட் நிதி ஒதுக்கீட்டை அங்கீகரித்த முதல்வருக்கு சுந்தரராஜூ நன்றியும் தெரிவித்துக் கொண்டார்.
அவற்றில் 28 தமிழ்ப் பள்ளிகளுக்கு மொத்தமாக 17 லட்சத்து 82 ஆயிரம் ரிங்கிட் ஒதுக்கப்பட்டது; தமிழ்ப் பள்ளிகளில் இயங்கி வரும் 14 பாலர் பள்ளிகளுக்கு 268,100 ரிங்கிட் வழங்கப்பட்டது.
அதே சமயம், தலா 40,000 ரிங்கிட் வீதம், 3 பஞ்சாபி கல்வி நிலையங்களுக்கு 1 லட்சத்து 20 ஆயிரம் ரிங்கிட் நிதி ஒதுக்கப்பட்டது.
தவிர, மலேசிய தெலுங்கு சங்கத்தின் கல்வி மையங்களில் தெலுங்கு மொழி வகுப்புகளை நடத்த, அச்சங்கத்திற்கு One-Off முறையில் 20,000 ரிங்கிட் நிதியும் ஒப்படைக்கப்பட்டது.
தமிழ்ப் பள்ளிகளின் சிறப்பு நிதியத்துக்கு ஒதுக்கப்பட்ட நிதியிலிருந்து இந்த 20,000 ரிங்கிட் தெலுங்குச் சங்கத்திற்கு வழங்கப்படுகிறது.
பாகான் டாலாம் சட்டமன்ற உறுப்பினர் குமரன் கிருஷ்ணன் உள்ளிட்ட பிரமுகர்களும், பள்ளிகளின் தலைமையாசிரியர்களும் பெற்றோர்களும் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.