
கோலாலம்பூர், நவம்பர்-14, நாட்டில் 2023 முதல் இவ்வாண்டு அக்டோபர் வரை, 18 வயதுக்குக் குறைவானவர்களை உட்படுத்திய 3,000-க்கும் மேற்பட்ட பாலியல் குற்றங்கள் பதிவாகியுள்ளன.
அவற்றில் 600-க்கும் மேற்பட்ட சம்பவங்கள் பள்ளிகளில் நடந்துள்ளன.
சட்ட சீர்திருத்தங்களுக்கான துணையமைச்சர் எம். குலசேகரன் மக்களவையில் இந்த அதிர்ச்சிகரமான தகவலை வெளியிட்டார்.
இதே காலகட்டத்தில் 3,601 சந்தேக நபர்கள் கைதுச் செய்யப்பட்டுள்ளனர்.
கவலையளிக்கும் இந்த எண்ணிக்கை, சிறார்களின் பாதுகாப்பு தேசிய முன்னுரிமையாக இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்துவதாக அவர் குறிப்பிட்டார்.
இந்நிலையில் கல்வி அமைச்சு, போலீஸ், தன்னார்வ அமைப்புகள் மற்றும் UNICEF இணைந்து பாதுகாப்பான பள்ளி திட்டம் மூலம் பாதுகாப்பை வலுப்படுத்த நிறுவன பாதுகாப்பு சீர்திருத்தக் குழுவை அமைத்துள்ளது.
‘பாதுகாப்பானப் பள்ளிகள் திட்டத்தின்’ கீழ் பாதிக்கப்பட்ட பள்ளிகளில் பாதுகாப்பு தணிக்கைகளையும் அக்குழு மேற்கொண்டுள்ளது.
இவ்வேளையில் சிறார்களின் நலன், கல்வி, சுகாதாரம் தொடர்பான தகவல்களை ஒருங்கிணைக்க தேசிய குழந்தைகள் தரவுத்தள மையம் உருவாக்கும் முயற்சியும் நடைபெறுகிறது.
ஆனால், வயதுக் குறைந்தவர்களின் தனிப்பட்ட விவரங்களைப் பகிர போலீஸாருக்கு 2001 சிறார் சட்டம் தடை விதிப்பதால், தனியுரிமை சவால்கள் நீடிப்பதாக குலசேகரன் கூறினார்.



