
குவந்தான் , செப் 19 – குவந்தான், Taman Tasசில் ஒரு மோட்டார் சைக்கிள் மற்றும் மூன்று லோரிகள் சம்பந்தப்பட்ட விபத்தில் UCYP பல்கலைக்கழக மாணவர் ஒருவர் மரணம் அடைந்தார்.
நேற்று மாலை மணி 4.30 அளவில் விபத்து நிகழ்ந்த இடத்திலேயே முகமட் ஹடிப் இஷாக் (Muhammad Hadif Ishak) என்ற 18 வயது மாணவர் இறந்தார் என குவந்தான் போலீஸ் தலைவர் துணை கமிஷனர் அஷாரி அபு சாமா ( Ashari Abu Samah ) தெரிவித்தார்.
இந்த விபத்தில் 33 வயதுடைய லோரி ஓட்டுனர்களில் ஒருவர் தனது வலது கையில் காயம் அடைந்ததைத் தொடர்ந்து குவந்தான் Tengku Ampuan Afzan மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
Gambangகிலிருந்து வந்த காங்கிரிட் சிமெண்ட் அரைக்கும் லோரி ஒன்று குவந்தானை நோக்கி வளைந்தபோது இடதுபுறத்திலிருந்து வந்த மோட்டார்சைக்கிளோட்டி அந்த லோரியுடன் மோதியதைத் தொடர்ந்து அவர் வலதுபுறப் பகுதியில் கீழே விழுந்தார்.
அப்போது வலதுபுறம் சென்ற வாகன இழுவை லோரி திடீரென பிரேக் வைத்தபோதிலும் மோட்டார்சைக்கிளோட்டி மீது மோதியது. அந்த வேளையில் பின்னால் வந்த மூன்றாவது லோரி உடனடியாக நிறுத்த முடியாமல் இழுவை லோரியின் பின்புறம் மோதியதாக தொடக்கக் கட்ட விசாரணையில் தெரியவந்ததாக அஷாரி அபு சாமா வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.
1987 ஆம் ஆண்டின் சாலை போக்குவரத்து சட்டத்தின் 41 (1) ஆவது பிரிவின் கீழ் இந்த விபத்து குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.