
கோலாலம்பூர், ஏப்-3-தண்ணீர்க் குழாய் சுருள் பெட்டிக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 265,920 ரிங்கிட் மதிப்புடைய 3.32 கிலோ ஹெராயினை கடத்த முயன்ற சுவிஸ்லாந்து ஆடவர் ஒருவர், கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்திற்கு (KLIA) வந்திறங்கியதும் கைது செய்யப்பட்டார்.
மலேசிய எல்லைக் கட்டுப்பாடு மற்றும் பாதுகாப்பு நிறுவன பணியாளர்களின் உதவியுடன் போதைப்பொருள் கண்டறியப்பட்டதாக KLIA சுங்கத் துறை இயக்குநர் சுல்கிப்லி முகமட் ( Zulkifli muhammad) தெரிவித்தார்.
KLIA இரண்டாவது முனையத்தின் வருகையாளர் மண்டபத்தில் தடுத்து நிறுத்தப்பட்ட அந்த ஆடவர் தென் கிழக்காசிய நாட்டிலிருந்து மலேசியாவிற்குள் நுழைய முயன்றார்.
அவர் கொண்டு வந்திருந்த தண்ணீர்க் குழாய் சுருள் பெட்டியை ஸ்கேன் செய்தபோது, அதற்குள் சந்தேகத்திற்கிடமான மற்றும் கேள்விக்குரிய படங்கள் இருப்பது தெரியவந்ததை அடுத்து அவர் தடுத்து நிறுத்தப்பட்டதாக இன்று வெளியிட்ட அறிக்கையில் சுல்கிப்ளி கூறினார்.
மேற்கொண்டு நடவடிக்கை எடுப்பதற்காக, அந்த போதைப்பொருள் பின்னர் KLIA சுங்கத் துறை அமலாக்கப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டது.



