
புத்ராஜெயா, ஜூலை-9 – அரசாங்கத் துறையை உள்ளடக்கிய பால் மாவு விநியோக கும்பலின் பின்னணியில் மூளையாகச் செயல்பட்டதாக நம்பப்படும் 3 நபர்களை, மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான MACC விசாரித்து வருகிறது.
120 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள அப்பொருட்கள், குறிப்பிட்ட தரக் கட்டுப்பாடுகளைப் பூர்த்தி செய்யத் தவறியதாகக் கூறப்படுகிறது.
உள்நாட்டு வருவாய் வாரியமான LHDN மற்றும் பேங்க் நெகாரா மலேசியாவுடன் இணைந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக MACC வட்டாரமொன்று கூறியது.
நேற்று அம்மூன்று நிறுவனங்களின் அதிகாரிகள் கோலாலம்பூரில் உள்ள 3 வீடுகள் மற்றும் ஒரு நிறுவன வளாகத்தை சோதனை செய்ததாகவும், அவை பல்வேறு ஆவணங்களை பதுக்கி வைப்பதற்குப் பயன்படுத்தப்பட்டதாக நம்பப்படுவதாகவும் அந்த வட்டாரம் தெரிவித்தது.
2019-ஆம் ஆண்டுக்கு முந்தைய பால் மாவு விநியோக ஒப்பந்தங்கள் தொடர்பான ஆவணங்களை கைப்பற்றுவதில் இந்த சோதனை கவனம் செலுத்தியது.
சுமார் 70 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள 80 வங்கிக் கணக்குகளும் முடக்கப்பட்டன.
2001 பணமோசடி தடுப்பு, பயங்கரவாத எதிர்ப்பு நிதி மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகளின் வருமானம் சட்டத்தின் கீழ் விசாரணை மேற்கொள்ளப்படுகிறது.
1967-ஆம் ஆண்டு வருமான வரிச் சட்டத்தின் கீழ் LHDN-னும் இவ்விஷயத்தை விசாரித்து வருகிறது.