30 வருட பழைய ‘பிளாக் ஹாக்’ ஹெலிகாப்டர் கொள்முதல் திட்டம் ரத்து – மலேசிய ஆயுதப்படை

பெட்டாலிங் ஜெயா, ஆகஸ்ட் 19 – சுமார் 187 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலானா நான்கு ‘பிளாக் ஹாக்’ ஹெலிகாப்டர்களை வாங்குவதற்கான திட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக மலேசிய ஆயுதப்படைகளின் (ATM) தலைவர் ஜெனரல் டான் ஸ்ரீ முகமது நிஜாம் ஜாஃபர் அறிவித்துள்ளார்.
30 ஆண்டுகளுக்கும் மேலான பழைய ஹெலிகாப்டர்களை வாங்கும் முன்மொழிவை ரத்து செய்ய வேண்டும் என்ற யாங் டி-பெர்துவான் ஆகோங் சுல்தான் இப்ராஹிமின் ஆணையை மதித்து இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அவர் கூறினார்.
கடந்த சனிக்கிழமை, சுல்தான் இப்ராஹிம் பாதுகாப்பு அமைச்சிற்கு (MINDEF) பழைய பிளாக் ஹாக் ஹெலிகாப்டர்களை வாங்கும் முன்மொழிவை உடனடியாக ரத்து செய்ய உத்தரவிட்டிருந்தார்.
முன்னதாக பழைய ‘ஸ்கை ஹாக்’ விமானங்களை வாங்கியபோது ஏற்பட்ட பிழையை மீண்டும் செய்ய வேண்டாம் என்றும் அது நம் விமானிகளை ‘பறக்கும் சவப்பெட்டிகளில்’ அனுப்புவதற்கு சமம் என்றும் மாமன்னர் வலைதளத்தில் பதிவிட்டது குறிப்பிடத்தக்கது.