
புத்ரா ஜெயா, மார்ச் 31 -கே.எல்.ஐ.ஏ பகுதியில் நேற்று போலீஸ் ரோந்து காரைச் சேர்ந்த அதிகாரிகள் சந்தேகத்திற்குரிய ஹோண்டா சிவிக் கார் ஒன்றை துரத்திச் சென்று ஆடவன் ஒருவனை கைது செய்தனர்.
உள்நாட்டைச் சேர்ந்த அந்த நபர் 31 குற்றச் செயல்களில் சம்பந்தப்பட்டதற்கான பின்னணியை கொண்டிருந்தவர் என கே.எல்.ஐ.ஏ போலீஸ் தலைவர் எம் .ரவி தெரிவித்தார்.
KLIA பகுதியைச் சுற்றி குற்றத் தடுப்பு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த நடமாடும் ரோந்து வாகனப் பணியாளர்கள், ஒரு சிவப்பு நிற ஹோண்டா சிவிக் காரை நிறுத்த முயன்றபோது, அதன் ஓட்டுநர் சோதனைக்காக வாகனத்தை நிறுத்த மறுத்துவிட்டார்.
மாலை மணி 4.30க்கு நடந்த இந்தச் சம்பவத்தின்போது அந்த கார் ஓட்டுநர் மூன்றாவது மாடியிலுள்ள KLIA முனையத்தை நோக்கித் தப்பிச் செல்ல முயன்றபோது, வழியில் ஐந்து பொது வாகனங்களை மோதியபின் சம்பவ இடத்திற்கு அருகே வெற்றிகரமாகப் பிடிக்கப்பட்டார் என ரவி வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டார்.
30 வயதான அந்த நபரின் குற்றப் பதிவுகளும், போதைப்பொருள் தொடர்பான ஒரு குற்றத்தில் ஈடுபட்டிருப்பதும் தெரியவந்ததோடு அவர் போலீசாரால் தேடப்பட்ட நபராகவும் இருந்து வந்தார்.
அரசு ஊழியரின் கடமையைச் செய்யவிடாமல் தடுத்தது மற்றும் சேதம் விளைவித்தல் ஆகிய குற்றங்களுக்காக குற்றவியல் சட்டத்தின் 186, 427 பிரிவுகளின் கீழ் மற்றும் 1952 ஆம் ஆண்டின் அபாயகரமான போதைப்பொருள் சட்டத்தின் 15(1) பிரிவின் கீழ் விசாரணை நடைபெற்று வருகிறது.
மேலும் போக்குவரத்து விதிமீறல்களுக்காகவும் அந்த சந்தேகக் பேர்வழியிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த காரை போலீசார் துரத்திச் செல்லும் காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலானது.



