
புத்ராஜெயா,மார்ச்-17-உள்நாட்டு ஊடகத் துறையின் வளர்ச்சியும் இலக்கவியல் மாற்றமும் வலுப்பெற, அரசாங்கம் “ஊடக புத்தாக்க நிதியின்” கீழ் முதல் கட்டமாக 34 ஊடக நிறுவனங்களுக்கு மொத்தம் RM12.38 மில்லியன் ஒதுக்கீட்டை வழங்கியுள்ளது.
இந்த நிதி ஊடகத் துறையை போட்டித்திறன் மிக்கதாக்கவும், புதுமையை ஊக்குவிக்கவும், வேகமாக மாறிவரும் இலக்கவியல் சூழலை சமாளிக்கவும் உதவும் என தொடர்பு அமைச்சின் தலைமைச் செயலாளர் டத்தோ அப்துல் ஹலீம் ஹம்சா தெரிவித்தார்.
“இலக்கவியல் முன்னேற்றம், தகவல் பயன்பாட்டில் ஏற்பட்ட மாற்றம் மற்றும் வணிக மாதிரிகளில் உள்ள சவால்கள் காரணமாக, ஊடகத் துறை முக்கியமான மாற்றக் கட்டத்தை எதிர்கொண்டு வருகிறது,” என்றார்.
அவ்வகையில், புதிய அணுகுமுறைகளை ஆராய, தொழில்நுட்பத்தை பயனுள்ளதாக பயன்படுத்த மற்றும் துறையின் நிலைத்தன்மையை உறுதிப்படுத்த இந்த நிதி உருவாக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.
இந்நிகழ்வில் வணக்கம் மலேசியாவின் தலைமை நிர்வாக அதிகாரி தியாகராஜன் முத்துசாமியும் நிதி வழங்கல் கடிதத்தை பெற்றார்.
“இந்த நிதி ஊழியர் பயிற்சி மற்றும் நிறுவனத்தின் தொழில்நுட்ப மேம்பாட்டிற்கான முக்கிய முதலீடுகளுக்கு பயன்படுத்தப்படும்,” எனக் கூறிய தியாகராஜன் அரசாங்கத்திற்கு தமது நன்றியையும் தெரிவித்துக் கொண்டார்.



