
செபராங் பிறை, ஜனவரி-12-பினாங்கு, செபராங் பிறை செலாத்தான் மாவட்டத்தில் உள்ள டிரான்ஸ்கிரியன் (Transkrian) தோட்ட முன்னாள் தொழிலாளிகளான 80 குடும்பங்கள், அங்கிருந்து வெளியேற வேண்டிய அபாயத்தில் உள்ளனர்.
அவர்கள் வெறும் வாடகைக்கு இருப்பவர்கள் மட்டுமே என நில உரிமையாளர், கூறுவதே அதற்குக் காரணம்.
ஆனால், இந்த குடும்பங்கள் இன்று நேற்றல்ல…4 தலைமுறைகளாக அங்கு வாழ்ந்து வருகின்றனர்.
20 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு இடமாற்றம் செய்யும் திட்டத்தை மக்கள் நிராகரித்துள்ளனர்.
தங்கள் முன்னோர்கள் வாழ்ந்த இடத்தில் தங்க வேண்டும் என்பதே அவர்களின் கோரிக்கையாக உள்ளது.
இதனைக் கருத்தில் கொண்டு, இப்பிரச்னையில் பினாங்கு அரசாங்கம் தலையிட வேண்டுமென, மாநில முன்னாள் துணை முதல்வரும் உரிமைக் கட்சியின் தலைவருமான பேராசிரியர் Dr பி. இராமசாமி, வலியுறுத்தியுள்ளார்.
6 முதல் 7 ஏக்கர் நிலத்தை அரசாங்கம் கையகப்படுத்தி, பினாங்கு மேம்பாட்டுக் கழகம் அல்லது தனியார் மேம்பாட்டாளர்கள் மூலம் குறைந்த செலவில் அங்கேயே வீடுகள் கட்டப்பட வேண்டும் என அவர் வலியுறுத்துகிறார்.
மரபை காக்கவும், கண்ணியத்தை நிலைநிறுத்தவும், இந்த குடும்பங்களுக்கு வீடுகளை வழங்க வேண்டும் என்பதே அவர்களின் வேண்டுகோள் என, நேற்று அவர்களை நேரில் சந்தித்த பிறகு ராமசாமி கூறினார்.



