கோலாலம்பூர், அக்டோபர்-26,படைப்பாற்றல் இருந்தால் எந்தவொரு துறையிலும் நம்மால் தனித்து விளங்க முடியும்.
அதையே தாரக மந்திரமாக்கி, தான் கால் பதித்தத் துறையில் ஊரார் போற்றும் வகையில் உயர்ந்து நிற்பவர் தான் நம் எல்லோருக்கும் அறிமுகமான பிரபல கட்டடக் வரைக்கலை நிபுணர் டத்தோ பி.காசி.
40 ஆண்டுகளுக்கும் மேலாக கட்டட கட்டுமானத் துறையில் கோலோச்சி வரும் டத்தோ பி.காசிக்கு, அண்மையில் மலேசியக் கட்டட வரைக்கலை சங்கத்தின் மிக உயரிய விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.
அர்ப்பணிப்புமிக்க வாழ்நாள் சேவை, சிறந்த தலைமைத்துவம், ஆலோசகச் சேவை மற்றும் சிறந்த பங்களிப்புக்காக 2024-ஆம் ஆண்டுக்கான PAM Kington Loo Medal எனும் அவ்விருது இவருக்கு வழங்கப்பட்டது.
அதனை சிறப்பிக்கும் விதமாக நேற்று நடைபெற்ற விழாவில் துறை சார் நண்பர்கள், உறவினர்கள், நலம்விரும்பிகள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்று, இவரின் சிறப்புகளை பகிர்ந்துகொண்டனர்.
டத்தோ காசி பழனியப்பன் என்ற இயற்பெயரைக் கொண்டவர், கோலாலம்பூர் பிரிக்ஃபீல்ட்ஸில் ஒரு நடுத்தர குடும்பத்தில் பிறந்து, பெரும் கட்டட வரைக்கலை கலைஞராக உருவெடுத்தார்.
சிறுவயதிலேயே கடும் உழைப்பு, அர்ப்பணிப்பு உணர்வு, கல்வியின் முக்கியத்துவம் போன்ற நண்பண்புகளால் ஊட்டி வளர்க்கப்பட்டவர், பின்னாளில் உலகளவில் சிறந்த கட்டட வரைக்கலை கலைஞர்களில் ஒருவராக உயர்ந்ததில் ஆச்சரியமில்லைதான்.
பள்ளி காலத்திலிருந்தே கணிதத்தை கரைத்துக் குடித்தவரான டத்தோ காசி, இந்தியா, புது டெல்லியில் உள்ள ஆசியத் திட்டமிடல் மற்றும் கட்டடக் கலைப் பள்ளியில் இளங்கலைப் பட்டப் படிப்பை முடித்தார்.
பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டதும், நாட்டில் ஏராளமான நகரங்களையும் உல்லாசத்தலங்களையும், 50,000-க்கும் மேற்பட்ட வீடுகளையும் கட்டிய MK Land குழுமத்தின் இணை நிறுவனரும் இவரே.
தேசியக் கட்டடக் வரைக்கலை சங்கத்தின் தலைவராகவும் சேவையாற்றியுள்ள 66 வயது டத்தோ காசிக்கு, தனது பதவி காலத்தில் அச்சங்கத்தை புதிய உச்சத்துக்கு கொண்டுச் சென்றதில் பெரும் பங்குண்டு.
கட்டட வரைக்கலையில் கொடி கட்டி பறந்த போதும், தான் கடந்து பாதையை மறக்காமல் பல்வேறு சமூக நலக் காரியங்களிலும் தன்னார்வ முன்னெடுப்புகளிலும் தம்மை ஈடுபடுத்திக் கொண்டு இவர் சேவையாற்றி வருகிறார்.