
ஜெராண்டூட், ஏப்ரல்-24,
பஹாங், ஜெராண்டூட்டில் 40 காட்டு யானைகள், குட்டிகளோடு சுங்கை தெம்பலிங் ஆற்றில் ஒய்யாரமாக நீந்தி கரையைக் கடக்கும் காட்சிகள் வைரலாகியுள்ளன.
உலு தெம்பலிங், கம்போங் குவாலா சாட் அருகே அந்த அரியக் காட்சி சுற்றுப் பயணிகளின் கேமராக்களில் பதிவாகியது.
பல சுற்றுப் பயணிகள் குவாலா தஹானில் இருந்து தாமான் நெகாரா தேசியப் பூங்கா நோக்கி ஆற்றின் குறுக்கே படகில் பயணம் செய்து கொண்டிருந்தனர்.
இராட்சத மரக் கட்டைகளே ஆற்றில் மிதப்பதாக நினைத்த வெளிநாட்டு சுற்றுப் பயணிகள், சற்று அருகில் வரும் போது தான், தும்பிக்கைகள் மேலே எழுவதைப் பார்த்து அது யானைக் கூட்டம் என்பதைக் கண்டு பரவசமடைந்தனர்.
சுற்றுப்பயணிகளோடு தாமும் அந்த கண்கொள்ளா காட்சியைக் கண்டதாக படகோட்டுநரான 45 வயது அஹ்மாட் டாஹ்லான் கூறினார்.
யானைகளுக்குத் தொந்தரவாக இருக்கக் கூடாது என்பதற்காக, படகை அவர் மெதுவாகச் செலுத்தியது, சுற்றுப்பயணிகளுக்கு அக்காட்சியைக் காண மேலும் தோதுவாகியது.
ஆற்றின் அக்கரையை அடைய யானைகளுக்கு சுமார் 20 நிமிடங்கள் பிடித்தது.
இவ்வேளையில், குடியிருப்பாளர்கள் மற்றும் சுற்றுப்பயணிகளின் பாதுகாப்பை உறுதிச் செய்ய, அங்குள்ள நிலவரங்களை கண்காணித்து வருவதாக அதிகாரிகள் கூறினர்.