
கோலாலாம்பூர், ஜூலை-25- அரசாங்க நிரந்தர மருத்துவர் பணியிடங்களை விரைந்து நிரப்புமாறு, பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் சுகாதார அமைச்சைப் பணித்துள்ளார்.
நிர்வாக கெடுபிடிகளால் பணியமர்வுகள் மிகவும் காலத் தாமதமடைந்துள்ளது ஏமாற்றமளிக்கிறது; எனவே இனியும் காலம் தாழ்த்தாது அவற்றை விரைந்து நிரப்புமாறு அன்வார் கேட்டுக் கொண்டார்.
இன்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் பிரதமர் அவ்வாறு வலியுறுத்தியதை, ஒற்றுமை அரசாங்கப் பேச்சாளர் டத்தோ ஃபாஹ்மி ஃபாட்சில் உறுதிப்படுத்தினார்.
வரும் நவம்பருக்குள் அக்காலியிடங்கள் நிரப்பப்படுமென சுகாதார அமைச்சு இலக்கு வைத்துள்ளது; ஆனால் இது ஒரு நீண்ட காலம் என பிரதமர் கருதுகிறார்.
குறிப்பாக, ஏராளமான அரசாங்க மருத்துவமனைகளில் காலியிடங்களை நிரப்ப வேண்டிய அவசரத் தேவை உள்ளது; இது ஒரு சாதாரண எண்ணிக்கை இல்லை என்பதை பிரதமர் சுட்டிக் காட்டினார்.
இதையடுத்து, நியமன நடைமுறைகள் எதுவும் பாதிக்கா வண்ணம், இந்த நிரந்தர பணியமர்த்தலை விரைவுப்படுத்த, சுகாதார அமைச்சர் டத்தோ ஸ்ரீ Dr சுல்கிஃப்ளி அஹ்மாட்டும் ஒப்புக் கொண்டுள்ளதாக ஃபாஹ்மி சொன்னார்.
நேற்று முந்தினம் மலேசியர்களுக்கு பல்வேறு நற்செய்திகளை அறிவித்த அன்வார், ஒப்பந்த மருத்துவர்கள் உட்பட 4,352 அரசாங்க மருத்துவர்களுக்கான காலியிடங்கள் விரைந்து நிரப்பப்படுமென்றார்.
சுகாதாரச் சேவைத் துறையில் மருத்துவர்களுக்கு அதிகத் தேவை ஏற்பட்டிருப்பதை அவர் சுட்டிக் காட்டியிருந்தார்.