
புத்ராஜெயா, அக்டோபர் 23 – கோலாலம்பூரில் நடைபெறவுள்ள 47வது ஆசியான் (ASEAN) மாநாட்டில் கலந்து கொள்ளவிருக்கும் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் உட்பட, அனைத்து உலகத் தலைவர்களுக்கும், உயர்தர பாதுகாப்பு வழங்கப்படும் என்று பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.
அனைத்து பாதுகாப்பு நிறுவனங்களும், மாநாடு நடைபெறும் காலக்கட்டத்தில், ஒவ்வொரு பிரதிநிதி குழுவின் பாதுகாப்பையும் உறுதி செய்யுமாறு உத்தரவிடப்பட்டுள்ளன.
நேற்று புத்ராஜெயாவில் நடைபெற்ற ‘தலைமை ஆசிரியர்களுடன் சந்திப்பு’ நிகழ்ச்சியில் பேசியபோது பிரதமர் இவ்வாறு தெரிவித்தார். வெளிநாட்டு விவகார அமைச்சர் டத்தோ ஸ்ரீ முகமட் ஹசானும் அந்நிகழ்வில் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
சில அமைப்புகள் ட்ரம்ப் வருகைக்கு எதிராக பேரணி நடத்தத் திட்டமிட்டிருப்பதைப் பற்றிய கேள்விக்கு பதிலளித்த அன்வார், மக்களுக்கு தங்களின் கருத்தை அமைதியாகவும் சட்டத்திற்குள்ளிருந்து வெளிப்படுத்தவும் உரிமை உண்டு. ஆனால் மாநாட்டை சீர்குலைக்கும் எந்தவித தீவிர நடவடிக்கையும் அனுமதிக்கப்படாது என்பதை அவர் திட்டவட்டமாக தெரிவித்தார்.
அக்டோபர் 26 முதல் 28 வரை கோலாலம்பூரில் நடக்கவிருக்கும் 47 வது மாநாடு, மலேசியா தலைமை வகிக்கும் 2025ஆம் ஆண்டின் முக்கியமான சர்வதேச நிகழ்வாகும். மாநாட்டின் கருப்பொருள் “ஒன்றிணைந்த வளர்ச்சி மற்றும் நிலைத்த முன்னேற்றம்” (Inclusivity and Sustainability) எனத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.