Latest

47-ஆவது ஆசியான் மாநாட்டின் தலைவராக உலக அரங்கில் மிளிர்ந்த அன்வார்

கோலாலாம்பூர், அக்டோபர்-28,

தென்கிழக்காசிய ஒற்றுமையின் முக்கிய நிகழ்வான 47-ஆவது ஆசியான் உச்சநிலை மாநாடு, 3-நாள் பல்வேறு வண்ணமய நிகழ்வுகளுடன் கோலாலாம்பூரில் இன்று வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது.

48-ஆவது உச்சநிலை மாநாடு அடுத்தாண்டு பிலிப்பின்ஸில் நடைபெறும்.

இந்நிலையில், இந்த 3 நாட்களைத் திரும்பிப் பார்த்தால் பல்வேறு அம்சங்களை நம்மால் புரிந்துகொள்ள முடியும்.

அமெரிக்க அதிபர் டோனல்ட் ட்ரம்ப் பங்கேற்பதால், தொடக்கத்தில், மாநாட்டுக்கு சில எதிர்மறையான வரவேற்பும், கூடவே சந்தேகப் பார்வை எழுந்ததையும் மறுக்க முடியாது.

ட்ரம்பின் வருகை, ஆசியான் மாநாட்டின் முக்கிய நோக்கத்தை மறைத்து விடுமென, வட்டார மற்றும் மேற்கத்திய ஊடகங்கள் யூகங்களை எழுப்பின.

இஸ்ரேலின் பங்காளியான ட்ரம்பின் வருகைக்கு எதிராக உள்ளூரில் சில அமைதி ஆர்ப்பாட்டங்களும் நடைபெற்றன;
ஆனால் அவை கட்டுப்பாட்டுடனும், மலேசியாவின் நற்பெயரை சீர்குலைக்காதவாறும் நடத்தப்பட்டன.

ஆனால், பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம், தனக்கே உரிய நயத்துடன் சமச்சீரான போக்கை வெளிப்படுத்தி, ட்ரம்புடனான நற்புறவை நிலைநிறுத்திய அதே சமயம், ஆசியான் சொல்ல வரும் செய்தியையும் தெளிவாகவும் தைரியமாகவும் முன்வைத்தார்.

ட்ரம்ப்பும், தன் பங்கிற்கு தாய்லாந்து–கம்போடிய அமைதிக்கு மலேசியா ஆற்றிய பங்குக்கும் காசா போர்நிறுத்த முயற்சிகளில் கொடுத்த ஆதரவுக்கும் பாராட்டுகளைத் தெரிவித்தார்.

அமெரிக்காவுடனான வர்த்தக ஒத்துழைப்பை வலுப்படுத்துவதில், ஆசியானை திறம்பட வழிநடத்தியமைக்கு அன்வாரை தனிப்பட்ட முறையிலும் ட்ரம்ப் பாராட்டினார்.

அமெரிக்காவின் புதிய வரி விதிப்பு ஒப்பந்தங்களிலிருந்து மலேசியா பல நன்மைகளைப் பெற்றது குறிப்பிடத்தக்க சாதனை. மலேசியப் பொருட்களுக்கு 19% வரி மற்றும் 1700-க்கும் மேற்பட்ட பொருட்களுக்கு வரியற்ற ஏற்றுமதியும் அந்த ஒப்பந்ததின் வழி சாத்தியமானது.

அதே சமயத்தில் சீனா, இந்தியா, பிரேசில், கனடா, ஆஸ்திரேலியா தென்னாப்பிரிக்கா போன்ற பல உலகத் தலைவர்களையும் வரவேற்று ஆசியான் நிலையிலும் இரு வழி பரஸ்பர பேச்சுவார்த்தைகளும் நடத்தப்பட்டன.

உபசரணை நாடு என்ற வகையில் மாநாடு நெடுகிலும் மலேசியாவின் அன்பான வரவேற்பும் விருந்தோம்பலும் ட்ரம்புடன் வந்த பேராளர் குழுவையே மலைக்கச் செய்தது.

மலேசியாவின் கட்டமைப்பு வசதிகளுக்கும் பாராட்டுகள் குவிந்தன.

இப்படியாக, இந்த 3-நாள் மாநாடு, வெறும் ஆசியான் வட்டாரத்தில் மட்டுமல்லாமல், உலகளவிலும் மலேசியாவின் நற்பெயரை உரக்க ஒலிக்கச் செய்துள்ளது.

ஒட்டுமொத்தத்தில், இந்த 47-ஆவது ஆசியான் உச்சநிலை மாநாடு, உலக அரங்கில் அன்வாரை ஒரு வலிமையான, செல்வாக்குமிக்க மற்றும் மதிப்புக்குரிய தலைவராக அடையாளம் காட்டியுள்ளது.

சுருங்கச் சொன்னால், சந்தேகப் பார்வையுடன் தொடங்கிய நிகழ்வில் மலேசியாவுக்கு பெரும் ‘சாதகமான சம்பவத்தை’ செய்து காட்டியுள்ளார் டத்தோ ஸ்ரீ அன்வார்…

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!