புத்ராஜெயா, பிப்ரவரி-6 – அட்டவணையிடப்பட்ட நச்சுப் பொருள் அடங்கியிருப்பதால் 5 அழகுச் சாதனப் பொருட்களுக்கு சுகாதார அமைச்சு தடை விதித்துள்ளது.
அவற்றை இனியும் மலேசியாவில் விற்கக் கூடாது என KKM அறிக்கையொன்றில் கூறியது.
மெர்குரி எனும் பாதரசம் கலந்த Molly Care Night Cream மற்றும் Karisma Brightening Day Cream, சருமத்தை வெண்மையாக்கும் hidrokuinon கலந்த Ufora Advance Repair Solution உள்ளிட்டவை அவற்றிலடங்கும்.
Betamethasone 17-valerate கலந்துள்ள Pinkkiss Beauty Care Herbal Cream மற்றும் tretinoin கலக்கப்பட்ட
Pinkkiss Beauty Care Treatment Cream ஆகியவை தடைச் செய்யப்பட்ட மேலுமிரு பொருட்களாகும்.
Hidrokuinon பயன்பாட்டால் தோல் சிவத்தல், அசௌகரியம், தேவையற்ற தோல் நிறமாற்றம் மற்றும் ஒவ்வாமை ஏற்படுகிறது;
அதே சமயம் tretinoin பயன்பாட்டால் தோல் சிவத்தல், அசௌகரியம், வலி, தோல் உரிதல் மற்றும் சூரிய ஒளி பட்டால் அதிக எரிச்சல் ஆகியவை ஏற்படுகிறது.
இவ்வேளையில், betamethasone 17-valerate பயன்பாட்டால் தோல் மெலிந்து, எரிச்சல் மற்றும் முகப்பரு ஏற்படலாம்.
எனவே, அவற்றை விற்பவர்களும் விநியோகிப்பவர்களும் உடனடியாக அதனை நிறுத்தி விட வேண்டும்.
மீறினால், 1984-ஆம் ஆண்டு போதைப்பொருள் மற்றும் அழகுச் சாதனப் பொருட்கள் கட்டுப்பாட்டுச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என KKM எச்சரித்தது.
மேற்கண்ட 5 பொருட்களையும் பயன்படுத்தும் பொது மக்கள், உடனடியாக அதனை நிறுத்தி விட்டு, பக்க விளைவுகளுக்கான அறிகுறிகள் தென்பட்டால் மருத்துவரை சென்று காணுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.