Latestமலேசியா

6 மாநிலங்களில் 600க்கும் மேற்பட்ட தன்னார்வலர்களுடன் விரிவாக்கம் காணும் Clean Thaipusam இயக்கம்

கோலாலம்பூர், ஜனவரி-23-Spritzer நிறுவனத்துடனான வியூக ஒத்துழைப்பின் வாயிலாக இவ்வாண்டு Clean Thaipusam இயக்கம் மேலும் விரிவடைந்துள்ளது.

குறிப்பாக விழிப்புணர்வு நடவடிக்கைகள், மறுசுழற்சி முன்னெடுப்புகள், மற்றும் தன்னார்வலர் பங்கேற்பு பெரிதும் அதிகரித்துள்ளது.

தைப்பூச காலத்தில் மக்களும் ஒத்துழைப்பு வழங்கி, மறுசுழற்சி பைகளைப் பயன்படுத்தி, கழிவுகள் மேலாண்மையை எளிதாக்கினால் இந்த முயற்சி மேலும் வெற்றிகரமாக அமையுமென, தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சின் துணையமைச்சர் யுனேஸ்வரன் ராமராஜ் நம்பிக்கைத் தெரிவித்தார்.

யுனேஸ்வரன் தலைமையில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தேவாஸ்தான அறங்காவலரும் MAHIMA தலைவருமான டத்தோ என். சிவகுமார், Spritzer Malaysia-வின் விளம்பரப் பிரிவு தலைவர் Shiao Chan உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

கடந்தாண்டு இந்த Clean Thaipusam இயக்கத்தின் மூலம் 320 கிலோ கிராம் பிளாஸ்டிக் கழிவுகள் பிரித்து சேகரிக்கப்பட்டன.

இவ்வாண்டு பத்து மலை மட்டுமல்லாமல், பினாங்கு, கெடா, பேராக், மலாக்கா, ஜோகூர் ஆகிய 6 மாநிலங்களிலும் இது நடைபெறுகிறது.

இதில் 600 க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் களமிறங்குவதாக, Clean Thaipusam நிறுவனர் JK Wicky கூறினார்.

2009-ஆம் ஆண்டில் தொடங்கிய இந்த முயற்சியின் ஒரு பகுதியாக, பத்து மலையில் 200-க்கும் மேற்பட்ட குப்பைத் தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன.

கழிவுகளைப் பிரித்தல், மறுசுழற்சி, மற்றும் Fruit Bank எனப்படும் வீணாகும் பழங்களை விலங்குகளுக்கு உணவாகக் கொடுக்கும் முயற்சி போன்ற மனிதாபிமானமான செயற்பாடுகளும் உண்டு.

இம்முயற்சி முழுக்க முழுக்க zero waste அல்லது பூஜ்ய விரயத்தை வலியுறுத்துகிறது.

இந்த விரிவுபடுத்தப்பட்ட Clean Thaipusam இயக்கத்தின் மூலம், தைப்பூச திருவிழா மேலும் சுத்தமுடனும், சுற்றுச்சூழல் தோழமையுடனும் கொண்டாடப்படும் என ஏற்பாட்டாளர்கள் நம்புகின்றனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!