
பெட்டாலிங் ஜெயா, ஜனவரி 21 – 6 வயதில் முதல் வகுப்பு சேர விரும்பும் குழந்தைகள், பள்ளிக்கல்விக்குத் தயாராக உள்ளார்களா என்பதை அறிய திறன் மதிப்பீட்டு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
கல்வி அமைச்சர் Fadhlina Sidek வெளியிட்ட தகவலின்படி, 6 வயதில் முதலாம் வகுப்பு சேர்க்கை விருப்ப அடிப்படையிலானது என்றும் தானாக வழங்கப்படாது என்றும் கூறப்பட்டுள்ளது. பரிசோதனை முடிவுகள் மற்றும் பெற்றோரின் முடிவின் அடிப்படையில் தான் சேர்க்கை குறித்து இறுதி தீர்மானம் எடுக்கப்படும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
6 வயதில் சேரும் மாணவர்கள், முதல் வகுப்பில் இரண்டு ஆண்டுகள் படிக்க வேண்டியதில்லை; அவர்கள் வழக்கமான 6 ஆண்டுகள் தொடக்க கல்வி மற்றும் 5 ஆண்டுகள் மேல்நிலை கல்வி முறையையே பின்பற்றுவார்கள். இதனால், மாணவர்கள் 16 வயதில் மேல்நிலை கல்வியை முடிப்பார்கள்.
கற்றல் தரம் பாதிக்கப்படாத வகையில் 2027 பள்ளி பாடத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், கூடுதல் வகுப்பறைகள் மற்றும் போதுமான ஆசிரியர்களை ஏற்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாகவும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.



