
கெப்பாளா பாத்தாஸ், ஜனவரி-25 – 6 வயது குழந்தைகள் அடுத்தாண்டு முதல் விருப்பத்திற்கேற்ப முதல் வகுப்பில் சேருவதால் கிடைக்கும் நன்மைகள், சவால்களை விட அதிகமாகும்.
எனவே, அதனை எதிர்மறையான கண்ணோட்டத்தில் பார்க்கக் வேண்டாம் என, பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கேட்டுக் கொண்டுள்ளார்.
உலக நாடுகள் பலவற்றில் 6 வயதிலேயே பள்ளிக் கல்வித் தொடங்குகிறது.
மலேசியாவும் தற்போது அதே நடைமுறையை பின்பற்றவிருப்பதாக அவர் சொன்னார்.
5 வயதில் பாலர் கல்வி தொடங்குவதால், குழந்தைகள் முதல் வகுப்பிற்கு தயாராகும் என்றார் அவர்.
குழந்தைகளுக்கு ஆரம்பத்திலேயே கல்வி கற்கும் வாய்ப்பு வழங்கப்பட்டால், அவர்கள் மிகவும் திறமையான கற்பவர்களாக மாற முடியும்; இது நாட்டை உயர்த்த உதவும் என அவர் கூறினார்.
அறிவாற்றல் மற்றும் உணர்ச்சி ரீதியாகத் தயாரான குழந்தைகளுக்கே 6 வயதில் முதல் வகுப்பில் சேர அனுமதி வழங்கப்படும் என கல்வி அமைச்சும் ஏற்கனவே தெளிவுப்படுத்தியுள்ளது.
ஆனால் எதிர்ப்பாளர்களோ, ஆசிரியர் பற்றாக்குறை, கலாச்சாரக் கவலைகள், மற்றும் வயது கலந்த வகுப்புகள் சவாலாக இருக்கும் என எச்சரிக்கின்றனர்.



