
கோலாலம்பூர், மார்ச்-13-இந்திய வெளியுறவு அமைச்சு, 87-ஆவது முறையாக பிப்ரவரி 8 முதல் 27 வரை ‘Know India’ திட்டத்தை வெற்றிகரமாக நடத்தியது.
3 வாரங்கள் நீடித்த இந்நிகழ்ச்சியில் 15 நாடுகளைச் சேர்ந்த 36 மாணவர்கள் பங்கேற்றனர்.

மலேசியாவிலிருந்து முதல் முறையாக 4 இளைஞர்கள் பங்கேற்றதும் குறிப்பிடத்தக்கது.
அவர்கள் முறையே, மலேசியா அறிவியல் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த முதுகலை மாணவர் கரன் ராஜ் சந்திரா, மலாயா பல்கலைக்கழக முதுகலை மாணவர் கிருதி லிங்கம், தகவல் தொழில்நுட்பத் துறையில் உதவி அமைப்பு பொறியாளராக பணியாற்றும் டேஷன் செல்வராஜு, நெகிரி செம்பிலான் இந்திய இளைஞர் பேரவையின் தலைவர் ஹேமநாத் சியாமளரூபன் ஆவர்.
பொது உறவுத் துறையில் இளங்கலைப் பட்டம் பெற்று, தற்போது மலேசிய இந்திய இளைஞர் பேரவையின் பேராக் மாநிலக் கிளையின் தகவல் பிரிவுத் தலைவராகவும் உள்ள கரன் ராஜ் சந்திரா, இத்திட்டத்தில் கிடைத்த அனுபவங்களை வணக்கம் மலேசியாவுடன் பகிர்ந்துகொண்டார்.

பங்கேற்பாளர்கள் புது டெல்லி மற்றும் ஆக்ராவில் உள்ள இந்தியா கேட், தேசிய போர் நினைவிடம், பிரதமரின் சங்கரஹாலயா, அக்ஷர்தாம் கோவில், தாஜ்மகால், ரிசர்வ் வங்கி உள்ளிட்ட முக்கிய இடங்களைப் பார்வையிட்டனர்.
பின்னர் குவாஹாத்தியில் காமாக்யா கோவில், IIT Guwahati, NIPER, அசாம் மாநில அருங்காட்சியகம் ஆகியவற்றை ஆராய்ந்தனர்.
இத்திட்டம், இந்தியாவின் பாரம்பரியம், ஆட்சி அமைப்பு, கல்வி, புதுமை, மற்றும் வளர்ச்சியை ஆழமாக அறிய வாய்ப்பளிக்கிறது.
மலேசிய இளைஞர்களின் பங்கேற்பு, இரு நாடுகளுக்கிடையேயான மக்களுக்கும் மக்களுக்குமான உறவை மேலும் வலுப்படுத்துகிறது.



