இஸ்தான்புல், செப்டம்பர்-6 – இந்த 2024-ஆம் ஆண்டின் கோடைக் காலம் உலகளவில் புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.
இவ்வாண்டு ஜூன் முதல் ஆகஸ்ட் வரையிலான உலகளாவிய சராசரி வெப்பநிலை, 1991-2020 வரையிலான காலக்கட்டத்தில் பதிவான சராசரியுடன் ஒப்பிடுகையில், 0.69 பாகை செல்சியஸ் உயர்ந்துள்ளது.
2023-ல் பதிவான சாதனையான 0.66 பாகை செல்சியசை அது முறியடித்துள்ளதாக, ஐரோப்பிய ஒன்றியத்தின் பருவநிலை கண்காணிப்பகமான CS3 தெரிவிக்கிறது.
ஐரோப்பிய கண்டமே வரலாற்றில் தனது மோசமான கோடைக் காலத்தைச் சந்தித்துள்ளது.
அங்கு, சராசரி வெப்ப நிலையை விட 1.54 பாகை செல்சியல் அதிகமாக பதிவாகியுள்ளது; முந்தையச் சாதனை, 2022-ல் பதிவான 1.34 பாகை செல்சியசாகும்.
மாதங்கள் அடிப்படையில் பார்த்தால், இவ்வாண்டு ஆகஸ்ட் மாதம், கடந்தாண்டு ஆகஸ்ட் போலவே, உலகம் முழுவதும் மிகவும் வெப்பான ஆகஸ்ட் மாதமாக பதிவாகியுள்ளது.
கடந்தாண்டு செப்டம்பர் முதல் இவ்வாண்டு ஆகஸ்ட் வரையிலான 12 மாதக் காலக்கட்டமானது, உலக வரலாற்றில் மக்கள் அனுபவித்த தீவிர வானிலை மற்றும் அசாதாரண வெப்பநிலையாகும்.
சராசரி வெப்பநிலையை விட 0.76 டிகிரி செல்சியஸ் அதிகமாகவும், தொழில்புரட்சிக்கு முந்தைய காலகட்டத்தின் சராசரியை விட 1.64 பாகை செல்சியஸ் அதிகமாகவும் பதிவானதாக C3S அறிக்கைத் தெரிவிக்கிறது.
இந்த அசாதாரண வெப்பத்திற்கு முக்கிய காரணம் மனிதனால் ஏற்படும் பசுமை இல்ல வாயு வெளியேற்றமே.
இந்த கோடைக்காலத்தில் சுட்டெரிக்கும் வெப்பத்தைத் தடுக்க உரிய நடவடிக்கைகளை விரைந்து எடுக்காவிடில், மனிதர்களுக்கும் பூமிக்கும் பேராபத்து வருவதை தடுக்க முடியாமல் போய் விடுமென C3S எச்சரித்தது.