கோலாலம்பூர், செப்டம்பர்-20 – பருவமழை வரும் செப்டம்பர் 24-ஆம் தேதி தொடங்கி நவம்பர் மாத தொடக்கம் வரை நீடிக்குமென, மலேசிய வானிலை ஆராய்ச்சித் துறை தெரிவித்துள்ளது.
இதன் மூலம், கடந்த மே 17-ஆம் தேதி தொடங்கிய தென்மேற்குப் பருவமழைக் காலம் முடிவுக்கு வருகிறது.
இந்த பருவமழை கட்டத்தில், நாடு பல்வேறு திசைகளிலிருந்து பலவீனமானக் காற்றைப் பெறும்.
இச்சூழலானது, குறுகிய நேரத்திற்கு இடியுடன் கூடிய கனமழையையும், பலத்த காற்றையும் கொண்டுவருமென வானிலை ஆராய்ச்சித் துறை கூறியது.
குறிப்பாக மாலையிலும் முன்னிரவு நேரத்திலும், தீபகற்பத்தின் மேற்குக் கரையோரங்களிலும் உட்புறப்பகுதிகளிலும், மேற்கு சபாவிலும் மத்திய சரவாக்கிலும் அந்நிலை ஏற்படும்.
இது, திடீர் வெள்ளத்தை உண்டாக்கி, மரங்கள் சாயவும் வழி வகுக்குமென்பதோடு, வலுவில்லாத கட்டமைப்புகளுக்கும் சேதத்தை ஏற்படுத்தலாம்.
எனவே, இந்த வானிலை மாற்றத்தின் போது, பொது மக்கள் எப்போதும் விழிப்புடனும், மலேசிய வானிலைத்துறை வெளியிடும் வானிலை முன்னறிவிப்புகளைப் பின் பற்றி கவனமாகவும் இருக்க வேண்டுமெனக் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.