ஆக்ரா, செப்டம்பர் -22, இந்தியாவின் ஆக்ராவில் கடந்த வாரம் இடைவிடாமல் பெய்த கன மழையால், உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹால் கட்டடத்தில் பல விரிசல்கள் விழுந்துள்ளன.
தாஜ்மஹாலின் சுவர்களிலும் தரையிலும் அங்காங்கே விரிசல்கள் காணப்படுவது, வைரலான வீடியோக்களிலும் புகைப்படங்களிலும் தெரிகிறது.
பிரதான குவிமாடத்தின் சுவர்களில் செடிகள் முளைத்து, விரிசல்களின் வழியே மழை நீர் கசியும் காட்சிகளும் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் அவ்விவகாரம் குறித்து கருத்துரைத்த தொல்பொருள் ஆய்வாளர் ஒருவர், தாஜ்மஹாலின் பிரதான குவிமாடம் பாதுகாப்பாக இருப்பதாகவும், சேதம் எதுவும் இல்லையென்றும் கூறினார்.
எனினும் குவிமாடத்தில் நீர் கசியும் இடங்களும் விரிசல்கள் ஏற்பட்டுள்ள பகுதிகளும் அணுக்கமாகக் கண்காணிக்கப்பட்டு வருகின்றன.
அடைமழை நின்றவுடன் உரிய சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்படும் என்றார் அவர்.
கனமழையால் தாஜ்மஹால் தோட்டங்களில் ஒன்று வெள்ளத்தில் மூழ்கியதைக் காட்டும் வீடியோக்களும் வெளியாகி சுற்றுப்பயணிகள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.