கோலாலம்பூர், செப்டம்பர் 25 – எதிர்வரும் செப்டம்பர் 28ஆம் திகதி, சனிக்கிழமை, பத்துமலை திருத்தலத்தில், உலக சைவ நன்னெறி மாநாடு நடைபெறவுள்ளது.
உலகின் பல பகுதிகளிலிருந்து சைவ சமயக் குறவர்களும், சைவ சமய அறிஞர்களும், சமயவாதிகளும் இம்மாநாட்டில் பங்கேற்க விருக்கின்றனர்.
அவ்வகையில், மாலை 6 மணி முதல் தொடக்கம் காணவுள்ள இந்நிகழ்ச்சியைக் குறித்து இவ்வாறு விளக்கமளிக்கிறார் ஸ்ரீ மகா மாரியம்மன் கோயில் தேவஸ்தனத்தின் தலைவர் டான் ஸ்ரீ டத்தோ ஆர். நடராஜா.
Interview
இந்நிகழ்ச்சியில், தருமபுர ஆதீனம் 27ஆவது குரு மகா சன்னிதானம் ஸ்ரீ ல ஸ்ரீ கயிலை மாசிலாமணி, தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் ஆசியுரையோடு இம்மாநாடு நடைபெறவிருக்கிறது.
அதுமட்டுமல்லாமல், இம்மாநாட்டில் ஆதினம் சார்பாக, மலேசியாவில் சைவ சமயத்திற்காக சேவை செய்பவர்களாக தேர்தெடுக்கப்பட்ட 5-வருக்கு, இவர் விருதுகளை வழங்கி கெளரவிப்பார் எனவும் டான் ஸ்ரீ டத்தோ ஆர். நடராஜா கூறினார்.
அருள்மிகு மகா மாரியம்மன் தேவஸ்தான தலைவர் டான் ஸ்ரீ நடராஜா, தாப்பா நாடாளுமன்ற உறுப்பினரும் மஇகா தேசியத் துணைத் தலைவருமான டத்தோ ஸ்ரீ எம். சரவணன், தருமை ஆதீனப் புலவர் மரபின் மைந்தன் முத்தையா, முனைவர் செல்வநாயகம் ஆகியோரும் சிறப்பு விருந்தினர்களாக இம்மாநாட்டில், சமய உரையாற்றவிருக்கிறார்கள்.
முற்றிலும் இலவசமான இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சமய சிந்தனையையும், அறிவையும் பெருக்கிக் கொள்ள அற்புதமான வாய்ப்பாகும்.
இந்நிகழ்ச்சியில் சிறார்கள் முதல் பெரியோர்கள் வரை தவறாமல் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு அன்புடன் ஏற்பாடுக் குழுவினர் அழைக்கின்றனர்.