பெட்டாலிங் ஜெயா,செப்டம்பர் -27 – நாட்டில் 20 வணிக நிறுவனங்கள் அடுத்த செவ்வாய்க்கிழமை முதல் பிளாஸ்டிக் பயன்பாட்டை முழுமையாக முடிவுக்கு கொண்டு வருகின்றன.
பேரங்காடிகள், சிற்றங்காடிகள், பல்பொருள் விற்பனை கடைகள், சுகாதார மற்றும் அழகுச்சாதனப் பொருட்களை விற்கும் கடைகள், மருந்தகங்கள் என மொத்தம் 8,000 கடைகளில் அது நடைமுறைக்கு வருகிறது.
அத்திட்டத்தில் பங்கேற்றுள்ள 20 நிறுவனங்களில் 99 Speedmart, AEON, 7-Eleven, Guardian உள்ளிட்டவையும் அடங்குமென, வீடமைப்பு ஊராட்சித் துறை அமைச்சர் ஙா கோர் மிங் (Nga Kor Ming) தெரிவித்தார்.
அவற்றில் சில கடைகள் ஏற்கனவே சுயமுயற்சியின் பேரில் அதனை நடைமுறைப்படுத்தியிருந்தாலும், அடுத்த வாரம் பேரளவில் அதனை அமுல்படுத்துகின்றன.
ஒருவேளை வாடிக்கையாளர்கள் சொந்தமாக பைகளைக் கொண்டு வராவிட்டால், கடைகளில் விற்கப்படும் மறுசுழற்சி பைகளை அவர்கள் வாங்கலாம் என்றார் அவர்.
இத்திட்டத்தின் வழி ஆண்டுக்கு 20 கோடி பிளாஸ்டிக் பைகளைக் குறைக்க முடியுமென அமைச்சர் கூறினார்.