
ஈப்போ, அக்டோபர்-4, “முடிந்தால் என்னைப் பிடியுங்கள்” என சவால் விடுக்கும் பாணியில் ஆள்மாறாட்டம் செய்து வேலை வாய்ப்பு மோசடியில் ஈடுபட்டு வந்த ஆடவர், இன்று ஈப்போ மேஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டார்.
ஆறாண்டுகளாக போலீஸ் கண்ணில் மண்ணைத் தூவி ஆட்டம் காட்டி வந்த 44 வயது Mohammad Fairul Baharudin மீது, குற்றவியல் சட்டத்தின் 420-வது பிரிவின் கீழ் மோசடி குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.
அதாவது, இல்லாத ஒரு விமானி வேலையை வாங்கித் தருவதாகக் கூறி, 60 வயது மாதுவிடம் 2016 முதல் 2018 வரை மொத்தமாக 24,000 ரிங்கிட் பணத்தை அவர் பறித்துள்ளார்.
எனினும் அக்குற்றச்சாட்டை மறுத்து அந்நபர் விசாரணைக் கோரினார்.
குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சமாக 10 ஆண்டுகள் சிறை, அபராதம் பிரம்படி விதிக்கப்படலாம்.
ஆள்மாறாட்டத்தில் வல்லவரான அவ்வாடவர், அரசு தரப்புத் துணைத் தலைமை வழக்கறிஞர், விமானி, எண்ணெய்-எரிவாயு நிறுவனத்தின் பொறியியலாளர் என எத்தனையே ‘வேடமணிந்து’, தன்னிடம் சிக்கியவர்களை ஏமாற்றி வந்துள்ளார்.
ஆறாண்டுகாளாக தீவிரமாக தேடப்பட்டு வந்த நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை இரவு சிலாங்கூர் அம்பாங்கில் வைத்து அவர் கைதானார்.