கோலாலம்பூர், அக்டோபர்-5 – அமெரிக்க டாலருக்கு எதிராக அண்மைய காலமாகவே வலுவாக பதிவாகி வருகின்ற போதிலும், மலேசிய ரிங்கிட் இன்னும் அதன் உண்மையானா, நியாயமான மதிப்பை அடையவில்லை என பிரதமர் கூறுகிறார்.
நாணய மதிப்பில் தென்கிழக்காசியாவிலேயே மிகச் சிறந்த நாணயமாக ரிங்கிட் திகழ்வது மகிழ்ச்சி தான் என்றாலும், 4 ரிங்கிட் 10 சென் என்ற நிலைமை இன்னும் போதாது என டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.
ஒரு காலத்தில், ஒரு அமெரிக்க டாலருக்கு எதிராக ரிங்கிட்டின் மதிப்பு 3 ரிங்கிட் 80 சென்னாக இருந்ததை யாரும் மறந்து விடக்கூடாது என்றார் அவர்.
இருந்தாலும், அரசாங்கம் தலையிடாமலேயே, ரிங்கிட்டின் மதிப்பு படிப்படியாக உயருவதைக் காணவே தாம் விரும்புவதாக பிரதமர் சொன்னார்.
“சந்தைப் பரிவர்த்தனைகளே அதனை முடிவு செய்யட்டும்; அப்போது தான் அரசாங்கக் கொள்கைகள் மற்றும் சீர்திருத்தங்கள் மீதான நம்பகத்தன்மை வெளிப்படும்” என CNBC தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் டத்தோ ஸ்ரீ அன்வார் கூறினார்.
கடந்த வாரம் வெள்ளிக்கிழமை 4.12-டாக பதிவாகிய ரிங்கிட்டின் மதிப்பு நேற்றைய பரிவர்த்தனை முடிவில் 4.21-ராக பதிவாகியது.
ரிங்கிட்டின் மீட்சி தொடருமேயானால், அமெரிக்க டாலருக்கு எதிராக 3 ரிங்கிட் 55 சென் என்ற மிக வலுவான நிலையை எட்ட முடியுமென பொருளாதார வல்லுநர்கள் சிலர் கணித்திருப்பது குறிப்பிடத்தக்கது.