கோலாலம்பூர், அக்டோபர்-5 – எதிர்வரும் 6.10.2024ஆம் நாளன்று ஹீவூட் தமிழ்ப்பள்ளி, மாண்புமிகு மலேசிய பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அவர்களால் திறப்பு விழா காணவிருக்கிறது. இது ஒரு மாபெரும் வரலாற்று நிகழ்வாக மலேசிய வரலாற்றுப் புத்தகத்தில் பதிவுறும்.
ஆனால், நாம் சற்றுப் பின் நோக்கி சென்றோமானால், ஹீவூட் தமிழ்ப்பள்ளி எழுவதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் முன்னாள் மலேசிய பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜிப் துன் ரசாக் ஆவார். சுமார் 12 ஆண்டுகளுக்கு முன்னர் மலேசியாவில் 6 புதிய தமிழ்ப்பள்ளிகள் கட்டுவதற்கு மலேசிய கல்வி அமைச்சு மூலம் அங்கீகாரம் பெற்று தந்து இந்தியர்களின் கல்வி மேமபாட்டிற்கு ஊன்றுகோலாக இருந்தார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
அன்றையச் சூழலில் இங்குள்ள தமிழ்ப் பள்ளியொன்றில் மாணவர் எண்ணிக்கை அதிக அளவில் இருந்த காரணத்தால், வகுப்பறைகள் போதாதக் குறையாக இருந்தது. எனவே, அக்குறையைப் போக்க சுங்கை சிப்புட்டில் அனைத்து வசதிகளும் கூடிய தமிழ்ப்பள்ளி ஒன்று கட்ட வேண்டும் என்ற எண்ணத்தில் ஹீவூட் தமிழ்ப்பள்ளியின் நடவடிக்கைக் குழுத் தலவர திரு.சொ.தியாகராஜன் தலைமையில், முன்னாள் தலைமையாசிரியர் திரு.க.சின்னச்சாமி, ஆசிரியர் திரு.சபா.கணேசு, திரு. சி.இராஜகுமாரன் ஆகியோர் பிரமர் துறையில் விண்ணப்பம் வைத்தனர். அவர்கள்தம் விண்ணப்பத்தைச் செவிமடுத்த முன்னாள் பிரமர் டத்தோ ஸ்ரீ நஜிப் துன் ரசாக் அவர்கள், கல்வி அகமச்சுக்கு இக்கட்டுமானப் பணியை உடனடியாகத் தொடங்க உத்தரவு வழங்கினார்.
சுமார் 5.2 ஏக்கர் நிலமே கட்டுமானப் பணிக்கு ஒதுக்கப்பட்ட நிலையில், முன்னாள் பிரதமர் துறை துணையமைச்சரும், தேசிய ம.இ.கா.வின் உதவித் தலைவருமான டத்தோ ஸ்ரீ எஸ்.கே. தேவமணி அவர்கள் கூடுதலாக 0.8 ஏக்கர் நிலத்தை சைம் டர்பி நிறுவனத்திடமிருந்து பெற்றுத் தந்தார்.
அதன் பின்னர், அன்றைய ம.இ.கா. தேசிய தலைவர் டான் ஸ்ரீ எஸ். சுப்ரமணியம் தலைமயில், முன்னாள் துணைக் கல்வியமைச்சர் டத்தோ ப. கமலநாதன் சிறப்பு வருகையுடன் பள்ளியின் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. அதன் பின்னர், சுமார் 30% மட்டுமெ எழுபிய இப்பள்ளி சில காரணத்தால் குத்தகையாளர்கள் கட்டுமானப் பணியை கைவிடப்பட்டதன் விளைவாக, பள்ளிக் கட்டடப் பணி முடக்கப் பட்டு கிடப்பில் போடப்பட்டது.
இதற்கிடையில் 2016 ஆண்டு குத்தகையாளர்களால் இக்கட்டடப்பணி கைவிடப்பட்ட நிலையில், மீண்டும் கட்டுமானப் பணியைத் தொடங்குவது என்றால் கல்வியமைச்சால் புதிய குத்தகையாளர் உரிமம் வழங்கப்பட வேண்டும். இச்சூழலில், 2018ஆம் ஆண்டு மீண்டும் நாடு தழுவிய அளவில் பெரும் அரசியலில் மாற்றம் நேர்ந்தது. அரைகுறையாக கட்டப்பட்ட நிலையிலிருந்த ஹீவூட் தமிழ்ப்பள்ளி முழுமைப்பெறுமா? என்ற வினா பொதுமக்களால் வினவப்பட்டது.
எவரும் கேட்பாரற்ற நிலையில் புதர் மண்டி காட்சியளித்த இப்பள்ளிக்கு மீண்டும் புத்துயிர் வழங்க வேண்டும் என்று இப்பள்ளியின் நடவடிக்கைக் குழுத் தலைவர் திரு.சொ.தியாகராஜன், ம.இ.கா.வின் தேசியத் தலைவர் டான் ஸ்ரீ ச.விக்னேஸ்வரன் அவர்களைச் சந்தித்தார். டான் ஸ்ரீ விக்னேஸ்வரன் அவர்கள் சுங்கை சிப்புட் மக்களுக்குப் பல அளப்பரியச் சேவைகளை வழங்கி வந்த வேளையில், இப்பள்ளிக்கும் கட்டாயம் புத்துயிர் வழங்குவார் என்ற அவர் நம்பிக்கைக்கு டான் ஸ்ரீ அவர்கள் ஏமாற்றம் தராமல் கல்வி அமைச்சை தொடர்பு கொண்டு, புதிய குத்தகையாளர் உரிமம் பெற்றுத் தர உறுதுணையாகத் திகழ்ந்தார்.
அதுமட்டுமல்லாமல், 30% கட்டடம் எழுபபியிருந்த நிலையில், அக்கட்டட அமைப்பின் படவரைவு விவரக்குறிப்புகளில் இருந்த தவற்றினால், அக்கட்டடம் முழுமையாகத் தகர்க்கப்பட்டுப் புதிய படவரைவு விவரக்குறிப்புகளின்படி இன்றைய அழகியக் கட்டடம் நிர்மானிக்கப்பட்டது. தேசிய முன்னணியின் ஆதரவு இல்லாமல், ம.இ.கா.வின் ஈடுபாடு இல்லாமல் இப்பள்ளி இங்கு எழுந்திருக்கவே முடியாது என்பதை இப்பள்ளியின் நடவடிக்ககக் குழுத் தலைவரும், பள்ளி மேலாளர் வாரியக் குழுத் தலைவருமான திரு.சொ.தியாகராஜன் அவர்கள் நன்கு அறிவார்.
கடந்த 2020-ஆம் ஆண்டு முதல் ம.இ.கா.வின் தேசியத் தலைவர் டான் ஸ்ரீ விக்னேஸ்வரன் அவர்கள் சுங்கை சிப்புட் தொகுதிக்கு வருகையளித்து இங்குள்ள மக்களுக்குப் பல்வேறு சேவைகளை வழங்கி வருகின்றார். அவரது காலத்தில்தான் இக்கட்டடத்திற்கான முன்னெடுப்புத் தொடங்கப்பட்டது என்பதையும் யாராலும் மறக்க முடியாது. தொன்றுத் தொட்டு இந்த ஹீவூட் தமிழ்ப்பள்ளி இங்கு எழுவதற்கு முக்கிய காரணமாகத் திகழ்ந்தது தேசியத முன்னணியும். ம.இ.காவும் முக்கிய முதுகெலும்பாகத் திகழ்ந்துள்ளனர்.
எனவே, ஹீவூட் தமிழ்ப்பள்ளியின் மேலாளர் வாரியக் குழு முழுமையாகக் கல்விமான்கள் அடங்கியதாகும். மாண்புமிகு பிரதமரை அழைத்துவந்து இப்பள்ளிக்குத் திறப்பு விழா செய்து வரலாறு காணவேண்டுமென்பது அளப்பரிய செயல். அதேவேளையில், இப்பள்ளி இவ்விடம் எழுவதற்கு வித்திட்டவர்களை புறக்கணிக்காமல் அதுவும் ஒரு வரலாற்று பதிவுதான் என்பதை அவர்களும் சமுதாயத்திற்கு உணர்த்த வேண்டும்.
டான் ஸ்ரீ விக்னேஸ்வரன் இப்பள்ளி எழுவதற்குப் பலரைக கடிதம் வழி தொடர்புக் கொண்டதும் நேரடியாகச் சந்தித்து பள்ளிக் கட்டமைப்பைத் துரிதப்படுத்தியதும் பலரும் அறிந்ததே. “பால் பசுவுவடையது; பெயர் நெய்யுக்கு” என்ற மலாய் மூதுரையை நினைவுக் கூறும் வகையில் பலரும் பலவித கருத்துகளைக் கூறி வருவது வேதனையளிக்கிறது.
மேலும், ஏற்கனவே பல பொது இயக்கங்களும், பொதுமக்களும் ஆவல் கொண்டது போல பின்வரும் காலத்தில் இப்பள்ளிக்குத் துன் சாமிவேலு அவர்களின் பெயரைச் சூட்ட முடிந்தால் மேலும் சிறப்பாக இருக்கும் என சுங்கை சிப்புட் தொகுதி ம.இ.கா. தலைவரான சின்னராஜு வீரப்பன் தெரிவித்தார். மறைக்கப்படுவதும், மறுக்கப்படுவதும் காலத்தின் கட்டாயம் அல்ல அது ஒரு தனிமனிதனின் சுயநலம்.