பத்து பஹாட், அக் 15 – சரக்கு ஏற்றிச்சென்றுகொண்டிருந்த டிரெய்லர் லோரி ஒன்று பத்து பஹாட் , ஸ்ரீ மேடான் எச்சரிக்கை விளக்குப் பகுதியில் நான்கு கார்கள் மற்றும் இரு மோட்டார் சைக்கிள்களை மோதிய சம்பவம் குறித்து காணொளி வைரலானது. இந்த விபத்திற்கு அந்த லோரியின் பிரேக்கில் ஏற்பட்ட கோளாறே காரணம் என நம்பப்படுகிறது. பாரிட் சுலோங்கிலிருந்து ஜோகூர் பாருவை நோக்கி செங்கல் ஏற்றிச்கொண்டு அந்த டிரெய்லர் லோரி சென்று கொண்டிருந்தபோது இந்த விபத்து ஏற்பட்டதாக பத்து பஹாட் மாவட்ட போலீஸ் தலைவர் துணை கமிஷனர் Shahrulanuar Mushaddat Abdullah Sani தெரிவித்தார்.
சாலையின் மேட்டுப் பகுதியிலிருந்து கீழே இறங்கிக் கொண்டிருந்த அந்த லோரி பிரேக் பிரச்னையை எதிர்நோக்கியதால் சாலை எச்சரிக்கை விளக்குப் பகுதியில் சாலையில் நின்றுகொண்டிருந்த வாகனங்களையும் மோட்டார் சைக்கிளையும் மோதியதாக Shahrulanuar கூறினார். இந்த விபத்தில் நான்கு கார்களும் இரண்டு மோட்டார் சைக்கிள்களும் மிகவும் மோசமாக சேதம் அடைந்தது. எனினும் இச்சம்பவத்தில் உயிர்சேதம் எதுவும் ஏற்படவில்லை.