
சுங்கை பெசார், அக்டோபர்-22, கடந்த வாரம் சிலாங்கூர், புன்ச்சாக் ஆலாமில் எண்ணெய் நிலையமொன்றில் சலசலப்பை ஏற்படுத்தி வைரலான மாது, இன்று நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டார்.
மிரட்டல் விடுத்தது, பொது இடத்தில் இழிவாக நடந்துகொண்டது, போலீஸ் நிலையத்தில் அநாகரிகமாக செயல்பட்டது ஆகிய மூன்ற குற்றச்சாட்டுகள் அவர் மீது சுமத்தப்பட்டன.
அனைத்துக் குற்றச்சாட்டுகளையும் 42 வயது எல்யானா முஹமட் (Elyana Muhamad) ஒப்புக் கொண்டார்.
இதையடுத்து சுங்கை பெசார் மேஜிஸ்திரேட் நீதிமன்றம் அவருக்கு 5,500 ரிங்கிட் அபராதம் விதித்து தீர்ப்பளித்தது.
முதலிரண்டு குற்றங்களையும் அக்டோபர் 17-ஆம் தேதி இரவு 7.50 மணி வாக்கில் ஹில் பார்க் வணிக வளாக எண்ணெய் நிலையத்திலும், மூன்றாவது குற்றத்தை அக்டோபர் 19-ஆம் தேதி சவ்ஜானா உத்தாமா போலீஸ் நிலையத்திலும் புரிந்ததாக அவர் குற்றம் சாட்டப்பட்டிருந்தார்.
கடந்த வியாழக்கிழமை நிகழ்ந்த சம்பவத்தில், எண்ணெய் நிலையத்தில் இன்னொரு கார் நகர முடியாத அளவுக்கு அம்மாது தனது பெரிய காரை நிறுத்தியிருந்தார்.
அதைத் தட்டிக் கேட்ட சக வாடிக்கையாளரை, அவர் மூங்கில் கம்பால் தாக்க முயன்ற வீடியோ வைரலானது குறிப்பிடத்தக்கது.