
புத்ராஜெயா, அக்டோபர்-23 – தனியார் துறை ஊழியர்களுக்கான குறைந்தபட்ச சம்பளம் 1,500 ரிங்கிட்டிலிருந்து 1,700 ரிங்கிட்டாக உயர்த்தப்படுவதாக அண்மையில் அறிவிக்கப்பட்டிருந்தது.
அடுத்தாண்டு பிப்ரவரி 1-ம் தேதி முதல் அது நடைமுறைக்கு வருமென 2025 வரவு செலவுத் திட்டத்தைத் தாக்கல் செய்த போது பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்தார்.
அவ்வறிவிப்பு தொழிலாளர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருந்தாலும், அதன் அமுலாக்கம் குறித்து மக்கள் மத்தியில் பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளதை மறுக்க முடியாது.
இந்நிலையில், மக்களின் ஐயப்பாடுகளைக் களையும் விதமாக, frequently asked questions எனப்படும் கேள்வி பதில் வடிவில் மனிதளவ அமைச்சு பல முக்கிய அம்சங்களைத் தெளிவுப்படுத்தியுள்ளது.
அவ்வகையில், குறைந்தபட்ச சம்பளமானது மாதாந்திர அடிப்படைச் சம்பளத்தை மட்டுமே குறிக்கும்; அலவன்ஸ், ஊக்கத் தொகை போன்றவை கணக்கில் வராது என அமைச்சு கூறியது.
மாதச் சம்பளம் இல்லாமல் வேலை, டன் எடை, பயணம் அல்லது கமிஷன் அடிப்படையில் கூலி வழங்கப்படுபவர்களுக்கும், மாதா மாதம் 1,700 ரிங்கிட்டுக்கும் குறையாமல் அத்தொகை வழங்கப்பட வேண்டும்.
தொழிலாளியே ஒப்புக் கொண்டாலும் கூட, அரசாங்கம் நிர்ணயித்த குறைந்தபட்ச சம்பள விகிதத்துக்கும் குறைவாக முதலாளிகள் சம்பளம் வழங்குவது சட்டப்படி குற்றமாகும்.
இந்த குறைந்தபட்ச சம்பளமானது எவ்வித பாகுபாடும் பார்க்காமல் வெளிநாட்டுத் தொழிலாளர்களையும் உட்படுத்தியுள்ளது.
அதே சமயம் குறைந்தபட்ச சம்பளத்தையும் முன்னேற்றகரமான சம்பள முறையையும் (Progressive Wage Policy) ஒன்றாக அர்த்தப்படுத்திக் கொள்ளக் கூடாது.
முன்னேற்றகரமான சம்பள முறை என்பது அந்தந்த முதலாளிகள் தன்னார்வ முறையில் அமுல்படுத்துவதாகும் என அமைச்சு சுட்டிக் காட்டியது.
இந்த 1,700 ரிங்கிட் குறைந்தபட்ச சம்பள உத்தரவைப் பின்பற்றாத முதலாளிகளுக்கு, முதல் தடவை குற்றமென்றால் ஒரு தொழிலாளிக்கு பத்தாயிரம் ரிங்கிட் வரை அபராதம் விதிக்கப்படும்.
திரும்பத் திரும்பச் செய்பவர்களுக்கு, ஆக அதிகமாக 20,000 ரிங்கிட் அப்பராதம் அல்லது 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் என்பது குறிப்பிடத்தக்கது.